தமிழகம்

கல்வியில் தனியார் ஆதிக்கம் மேலோங்கும் உலக வர்த்தக மாநாட்டு ஒப்பந்தத்தை நிராகரிக்க வேண்டும்: தலைவர்கள் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

கல்வியை வர்த்தக மயமாக்கும் உலக வர்த்தக மாநாட்டு ஒப்பந்தத்தை இந்திய அரசு நிராகரிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளனர்.

ஜி.ராமகிருஷ்ணன்: கென்யா தலைநகர் நெய்ரோபியில் டிசம்பர் 15 முதல் 18 வரை உலக வர்த்தக அமைப்பின் 10-வது மாநாடு நடைபெறவுள்ளது. நவீன தாராளமய பொருளாதார கொள்கையை பின்பற்றி வரும் இந்தியாவில், ஏற்கெனவே கல்வி தனியார்மயமாகி வருகிறது. தற்போதைய பாஜக அரசு கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை பெருமளவு குறைத்துள்ளது.

இந்நிலையில், உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கல்வியை வர்த்தக மயமாக்கும் ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திய கல்வித் துறையில் தனியாரின் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும். உயர்கல்வி என்பது வெளிநாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்துக்கு உட்பட்டதாக மாறிவிடும். அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவம் சார்ந்த கல்வியை சாமானிய மக்கள் பெறமுடியாத நிலை ஏற்படும். இட ஒதுக்கீட்டு முறை பின்னுக்குத் தள்ளப் படும். எனவே, உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் கல்வியை வர்த்தக மயமாக்கும் ஒப்பந் தத்தை இந்திய அரசு நிராகரிக்க வேண்டும்.

திருமாவளவன்: நைரோபியில் நடக்கும் உலக வர்த்தக அமைப்பு மாநாட்டில் சேவைத் துறைகளான கல்வி, மருத்துவம், போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பன்னாட்டு நிறுவனங்கள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டால், பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் நம் நாட்டில் பின்தங்கிய கிளைகளையே நிறுவும். அந்த கல்வி நிறுவனங்களை இந்திய அரசோ, நீதித்துறையோ, அரசமைப்பு சட்டமோ கட்டுப்படுத்த முடியாது.

கல்வி உதவித்தொகை, இட ஒதுக்கீடு முறை, கல்வி உதவி பெறும் நிறுவனங்களுக்கு அரசு வழங்கும் கல்வி மானியம் ஆகியவை ரத்தாகும். எனவே, சமூக நீதிக்கும் அடித்தட்டு மக்களுக்கும் எதிரான உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தத்தில் இருந்து இந்திய அரசு முற்றாக வெளியேற வேண்டும்.

SCROLL FOR NEXT