ஆக்சிஜன் குழாய் பழுது காரணமாக, 7 பேர் பலியான விவகாரத்தில், மருத்துவக் கல்வி இயக்குனர் விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சுமார் 150க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு 145 படுக்கைகள் ஐசியூ வசதி கொண்டதாகவும், 360 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாகவும் உள்ளன. ஆக்சிஜன் விநியோகம் செய்வதற்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் 10 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஒருங்கிணைந்த ஆக்சிஜன் கொள்கலனும், கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் கொள்கலனும் பயன்பாட்டில் உள்ளன.
7 பேர் உயிரிழப்பு
ஆக்சிஜன் விநியோக மையத்தில் இருந்து வார்டுகளுக்குச் செல்லும் குழாயில் ஏப்.19 அன்று பிற்பகல் 3 மணியளவில் திடீர் தடை ஏற்பட்டது. இதைச் சரிசெய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்ட நேரத்தில், கரோனா சிகிச்சை வார்டு மற்றும் ஐசியூ வார்டில் ஆக்சிஜன் மூலம் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அடுத்தடுத்து மரணடைந்தனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மாற்று ஏற்பாடாக 5 அடி உயரம் கொண்ட சிலிண்டர்கள் மூலம் ஆக்சிஜன் விநியோகம் செய்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நோயாளிகளின் உறவினர்கள் சிலர், தாங்கள் வேறு மருத்துவமனைகளுக்குச் செல்வதாகக் கூறி ஆக்சிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் மூலம் நோயாளிகளை அழைத்துச் சென்றனர். ஆக்சிஜன் விநியோகக் குறைபாட்டால் அடுத்தடுத்து 7 பேர் உயிரிழந்தனர்.
மருத்துவமனையில் போதுமான அளவுக்குக் கையிருப்பில் ஆக்சிஜன் உள்ளது. 7 பேர் இறப்புக்கான விரிவான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் அடுத்தடுத்து 7 பேர் இறந்தது தொடர்பாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவக் கல்லூரி டீன் செல்வியிடம் விசாரணை நடத்தினார்.
வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்னும் 10 நாட்களுக்குத் தேவையான ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. எனவே, ஆக்சிஜன் தட்டுப்பாடு என்ற பிரச்சினையே இல்லை. 7 பேர் இறப்புக்கான காரணம் குறித்து மருத்துவக் கல்லூரி டீன் விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி கூறப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு தெரிவித்தார்.
இந்நிலையில் இது தொடர்பான செய்திகள், பல்வேறு பத்திரிகைகளில் வெளியாயின. இதைத் தொடர்ந்து, மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது.
7 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் குறித்து 2 வாரங்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயணபாபு மற்றும் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் செல்வி ஆகியோருக்கு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டு, நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.