தமிழகம்

சென்னை வெள்ளத்தில் மீட்கப்பட்ட கர்ப்பிணிக்கு இரட்டைக் குழந்தை

பிடிஐ

மழை வெள்ளத்தில் சிக்கி பாதிக்கப்பட்ட நிலையில் ராமாபுரத்திலிருந்து மீட்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு சுகப் பிரசவத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன.

*

தொடர் கனமழை, வெள்ளச் சேதம், சுகாதாரக் கேடு என பல வகையில் சென்னை உருக்குலைந்து இருக்கும் நிலையில், உணர்வுபூர்வமான மரியாதையை மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் விமானப்படைக்கு சமர்ப்பிக்கிறார் தீப்தியின் கணவர் கார்த்திக்.

*

சென்னை ராமாபுரத்தில் கர்ப்பிணிக்கு உதவி தேவைப்படுவதாக புட்டபர்த்தியிலிருந்து அந்த பெண்ணின் தோழி சவ்ஜன்யா லதா வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அளித்திருந்தார். அவருக்கு எந்த நேரத்திலும் இரட்டை குழந்தை பிறக்கலாம் என்றும். அவரை தொடர்பு கொள்ள வேண்டிய எண்ணையும் அவர் பகிர்ந்திருந்தார்.

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்தவர் தீப்தி வேல்சாமி (29). நிறைமாத கர்ப்பிணியான அவர் சென்னையில் டிசம்பர் முதல் வாரம் பெய்த கன மழையால், வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலையில் சிக்கினார். இவரை மீட்கக் கோரி மேற்கணட வாட்ஸ்ஆப் பகிர்வு இருந்தது.

மீட்பு பணியிலிருந்த இந்திய விமானப்படையின் 'சீட்டா' ரக ஹெலிகாப்டர் கடந்த டிசம்பர் 2-ம் தேதி தீப்தியை மீட்டு அவரை தாம்பரம் விமான நிலையத்துக்கு கொண்டு சென்றது. அங்கு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. மழை வெள்ளத்தில் அவரது கர்ப்பக் கால மருத்துவ குறிப்புகள் அடங்கிய கோப்புகள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்டன.

இதையடுத்து அவரது நிலை மோசமாக இருந்ததை அடுத்து அவர் ஏற்கெனவே சிகிச்சை பெற்று வந்த போரூர் ராமச்சந்திர மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஹெலிகாப்டர் மூலம் அழைத்து வரப்பட்டார். இதனை அடுத்து இரண்டு நாட்களுக்கு பின்னர், டிசம்பர் 4-ம் தேதி அவருக்கு இரட்டைப் பெண் குழந்தைகள் பிறந்தன.

தீப்தி தனது வீட்டில் சிக்கிக் கொண்டிருந்த அந்த சமயத்தில் அவரது கணவர் பணி நிமித்தமாக பெங்களூரூவில் இருந்தார்.

'நெகிழ்ச்சி வணக்கம்'

தற்போது தனக்கு பிறந்திருக்கும் இரட்டை பெண் குழந்தைகளும் தனது மனைவி தீப்தியும் நலமுடன் இருக்க காரணமான விமானப் படையினருக்கு நெகிழ்ச்சியான வணக்கத்தை சமர்ப்பித்திருக்கிறார் கார்த்திக்.

எங்களுக்கு பிறந்துள்ள இரட்டை தேவதைகளை கண்ட போது, சந்தித்த இன்னல்களை அனைத்தையும் மறந்துவிட்டோம். மகிழ்ச்சியான தருணம் இது. தக்க சமயத்தில் எங்களுக்கு உதவி புரிந்த இந்திய விமானப்படை அதிகாரிகள் அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறேன் என்றார்.

தீப்தி மட்டுமல்லாமல், மேலும் மூன்று கர்ப்பிணி பெண்களை விமானப்படையினர் மீட்டனர். கிண்டி அருகேயுள்ள மெடும்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யா (29) என்ற ஏழு மாத கர்ப்பிணி பெண் தனது 3 வயது மகனுடன் மீட்கப்பட்டார்.

அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளம் வரை தண்ணீர் புகுந்த நிலையில் குடியிருப்பின் நான்காவது மாடியில் இருந்ததாகவும் விமானப் படையினர் தங்களை மீட்கும் வரை, உயிர் பிழைப்போம் என்ற நம்பிக்கையே இல்லை என மீட்கப்பட்ட சுகன்யா தெரிவித்தார்.

SCROLL FOR NEXT