இரவு ஊரடங்கு காரணமாக பகல் நேரத்தில் அதிக அளவில் விரைவுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பல்வேறு வழித்தடங்களில் செல்வதற்குத் தயாராக இருந்த சொகுசு பேருந்துகள்.படங்கள்: ம.பிரபு 
தமிழகம்

இரவு நேர ஊரடங்கால், பகல் நேரத்தில் பயணம்: சென்னையில் இருந்து 1,000 பேருந்துகள் இயக்கம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு இருப்பதால் சென்னையில் இருந்து நேற்று பல்வேறு இடங்களுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 1000-க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டன.

கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் கடந்த 20-ம் முதல்இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இரவு 10 மணிமுதல் அதிகாலை 4 மணிவரை இந்த ஊரடங்கு அமலில் இருக்கும்.இதேபோல், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், இரவு நேர விரைவுபேருந்து சேவை ரத்து செய்யப்பட்டு, பகல் நேரத்தில் குறுகிய தூர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி, ஓசூர், சேலம், தருமபுரி உள்ளிட்ட இடங்களுக்கு கடைசி பேருந்துகள் மதியம் 2 மணிக்கும், சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட இடங்களுக்கு கடைசி பேருந்து சேவை மாலை 4 மணி வரையிலும் இயக்கப்படுகிறது.

அதுபோல், நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களுக்கு அதிகாலையில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பயணிகளின் தேவைக்கு ஏற்றார்போல், பேருந்துகள் வரிசைப்படுத்தி இயக்கப்பட்டன. வெயில் தாக்கம் அதிகரித்ததால் ஏசி சொகுசுபேருந்துகளும் கூடுதலாக இயக்கப்பட்டன. இதேபோல், ஆம்னிபேருந்துகளும் சென்னையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு பிரித்து இயக்கப்பட்டன. மொத்தமுள்ள ஆம்னி பேருந்துகளில் 30 சதவீத பேருந்துகள் நேற்று இயக்கப்பட்டன.

ஏசி பேருந்தில் செல்ல ஆர்வம்

இதுதொடர்பாக அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘பொதுமக்கள் பகல் நேரங்களில் அத்தியாவசியமான பயணமாகச் செல்கின்றனர். 22-ம்தேதி முகூர்த்த தினம் என்பதால், நேற்று காலை முதலே பயணிகள் வருகை அதிகமாக இருந்தது.

இதனால், சென்னை கோயம்பேட்டில் இருந்து நேற்றுமட்டும் 1000-க்கும் மேற்பட்ட விரைவு, சொகுசு மற்றும் குறுகியதூரம் செல்லும் பேருந்துகளை இயக்கியுள்ளோம். வெயில் காலம்என்பதால் ஏசி பேருந்துகளில் பயணிக்க மக்கள் விரும்புகின்றனர். எனவே, 80-க்கும் மேற்பட்ட ஏசி பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.

SCROLL FOR NEXT