கரோனா கட்டுப்பாடுகளுடன் மே 2-ம் தேதி திட்டமிட்டபடி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்றும் அன்று இரவு 12 மணிக்குள் முடிவுகளை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவை பொதுத்தேர்தல் நடந்தது. இதில் பதிவானவாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் 76 மையங்களில் வைக்கப்பட்டுள்ளன. மே 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்க உள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடுகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கடந்த சில தினங்களாகவே தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல்ஆணைய அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
ஆலோசனைக் கூட்டம்
அதன் தொடர்ச்சியாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ மற்றும் கூடுதல், இணை தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று காலை மீண்டும் ஆலோசனை நடத்தினர். குறிப்பாக, சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் வாக்கு எண்ணிக்கை மேஜைகள் அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து, மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், மாவட்ட சுகாதார ஒருங்கிணைப்பாளர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று மாலை ஆலோசனை நடத்தினார். அப்போது, கரோனா பாதிப்பு, வாக்கு எண்ணிக்கை மையங்களில் எடுக்கப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைககள் குறித்து விவாதிக்கப் பட்டது.
6 அடி இடைவெளி சாத்தியமா?
முன்னதாக செய்தியாளர்களிடம் சத்யபிரத சாஹூ கூறியதாவது:
தமிழகத்தில் தற்போதைய கரோனா பாதிப்பு, வாக்கு எண்ணிக்கையின்போது எடுக்கப்படவேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தேர்தல் ஆணையம் அறிக்கை கேட்டுள்ளது. இதையடுத்து தொடர்ந்து ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை மேஜை அமைக்கும்போது 6 அடி இடைவெளி சாத்தியமா என்பது குறித்துஅரசு அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. மேஜைகளின் எண்ணிக்கையை ஒரு அறைக்கு 7 அல்லது 10 அல்லது 14 என அமைக்கலாமா என்பது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கை நடக்கும்மே 2-ம் தேதி இரவு 12 மணிக்குள் முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம். இதுபற்றியும் ஆலோசனை நடக்கிறது. இதுதவிர, வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை சாத்தியமா, பரிசோதனை மேற்கொள்வதற்கான கால அவகாசம், அதற்கான வசதிகள் குறித்து சுகாதாரத் துறையுடன் பேசி வருகிறோம்.
மே 2-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால் சிரமம் ஏற்படும்என்பதால், ஊரடங்கு தளர்வுகுறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையை ஒத்தி வைப்பது குறித்து பலரும் கேட்டு வருகின்றனர். இதுவரை அது தொடர்பான ஆலோசனை நடக்கவில்லை. திட்டமிட்டபடி மே 2-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.