கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டம் மக்கள் பணத்தில்தான் நடத்தப்படுகிறது. வெளிநாட்டு பணத்தில் அல்ல. உதயகுமார் வாங்கியதாக கூறப்படும் பணத்தில் அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்புக்கு சம்பந்தம் இல்லை என்று கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பின் அமைப்பாளர் ஜி.அண்டன் கோமஸ் கூறினார்.
நாட்டின் பல பகுதிகளிலும் நிலக்கரிச் சுரங்கம், எண்ணெய்க் கிணறுகள், அணுமின் நிலையங்கள், நீர்மின் நிலையங்கள், நதிகள் இணைப்பு உள்பட அரசின் முக்கிய திட்டங்களை முடக்கும் நோக்கில் மேற்கத்திய நாடுகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலமாக பணத்தை இந்தியாவுக்குள் கொண்டு வருகின்றன’’ என்று அறிக்கை ஒன்றை பிரதமர் நரேந்திர மோடியிடம் மத்திய உளவுத்துறை சமர்ப்பித்துள்ளது.
இதுகுறித்து விளக்கம் அளிக்கும் விதமாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்பின் அமைப்பாளர் ஜி. அண்டன் கோமஸ் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களை சந்தித்தார். அவர் கூறியதாவது:
ஐ.பி. அனுப்பிய அறிக்கை
மத்திய அரசின் உளவுத்துறையான ஐ.பி., தொண்டு நிறுவனங்கள் பற்றிய அறிக்கை ஒன்றை கடந்த 3-ம் தேதி பிரதமர் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளது. நம் நாட்டில் வெளிநாட்டு உதவியுடன் இயங்கிவரும் 17 ஆயிரம் தொண்டு நிறுவனங்கள் பற்றி அதில் கூறப்பட்டுள்ளது.
‘இந்த தொண்டு நிறுவனங்கள் நாட்டின் வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிராக மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் காரணமாக, வளர்ச்சித் திட்டங்கள் மக்களைச் சென்றடையாததால் தனிநபர் வருமானம் 2. 3 சதவீதம் குறைந்துவிட்டது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.
உதயகுமார் பணம் வாங்கினாரா?
கூடங்குளம் அணுஉலை போராட்டம் 2006-ம் ஆண்டில் இருந்து நடந்துவருகிறது. ஆனால் ஊடகங்கள் மூலம் உதயகுமார் மட்டும் தனித்துக் காட்டப்பட்டு வந்தார். அவர் 2011-ம் ஆண்டில்தான் எங்கள் கூட்டமைப்பில் சேர்ந்தார். அவர் வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கியதாக தற்போது குற்றச்சாட்டு வந்துள்ளது. அது உண்மையா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், அந்த பணத்தில் எங்களது கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு கூட்டமைப்புக்கோ, போராடும் மக்களுக்கோ சம்பந்தம் இல்லை.
இதுநாள்வரையில் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து நடந்த போராட்டங்கள் அனைத்தும் மக்கள் பணத்திலேயே நடந்தது. தனிநபர் மீது சாட்டப்படும் குற்றம், போராட்டக் குழுவினரைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது. போராட்டத்தைக் காரணம்காட்டி யாராவது பணம் வாங்கியிருந்தால் எங்கள் அமைப்பு மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அண்டன் கோமஸ் கூறினார்.
அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் கு.பாரதி, தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத் தலைவர் கபடி பி.மாறன், ஒருங்கிணைந்த மீனவர் இயக்கத்தின் பானுமதி பாஸ்கர் உடனிருந்தனர்.