மதுரை நகரில் விபத்துகளைத் தடுக்க கே.கே.நகர் 80 அடி ரோடு, அழகர்கோவில் ரோடு, சிவகங்கை ரோடு, கோரிப்பாளையம் உட்பட பல்வேறு சாலைகளின் நடுவில் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. மெயின் ரோடுகளில் இருந்து பிரியும் சில குறுக்கு ரோடுகளில் இரும்பு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. இது சில இடங்களில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு களை ஏற்படுத்துவதாகப் புகார் எழுந்துள்ளது. லேக் வியூ சாலை யையும், கேகே.நகர் 80 அடி சாலை யையும் இணைக்கும் வகையில், வண்டியூர் பூங்கா முன்பிருந்து ஒரு குறுக்குச் சாலை (9-வது மெயின் ரோடு) செல்கிறது.
இந்த குறுக்குச்சாலை 80 அடி சாலையில் இணையும் இடத்தில் தற்போது இரும்புத் தடுப்புகள் வைத்து தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இச்சாலையிலிருந்து கே.கே.நகர் மெயின் ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள் இடதுபுறமாக திரும்பி, மின்வாரிய அலுவலகம் எதிரே வளைந்து, கே.கே.நகர் ஆர்ச், நீதிமன்றம் பகுதிக்குச் செல்ல வேண்டியுள்ளது. அங்கு போதிய இடமின்றி நெரிசல் ஏற்பட் டுள்ளது எனப் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து போக்குவரத்து துணை ஆணையர் சுகுமாறன் கூறுகையில், சில ரோடுகளில் தேவையின்றி சில குறுக்கு ரோடு சந்திப்புகள் அதிகம் இருக்கிறது. காவல் ஆணையரின் அறிவுறுத்தலில் கே.கே.நகர் 9-வது மெயின் ரோடும், 80 அடி சாலையும் சந்திக்குமிடத்தில் தடுப்பு ஏற்படுத்தி உள்ளோம். அதுபற்றி ஆய்வு செய்து, பொதுமக்களுக்கு சிரமம் இருந்தால் சரிசெய்யப்படும் என்றார்.