புதுச்சேரி மாநிலத்தில் கரோனா தொற்று பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், புதிதாக 619 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத்துறைச் செயலர் அருண் இன்று(ஏப். 21) வெளியிட்டுள்ள தகவலில் கூறியிருப்பதாவது:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 5 ஆயிரத்து 607 பேருக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில் புதுச்சேரியில் 470 பேருக்கும், காரைக்காலில் 70 பேருக்கும், ஏனாமில் 41 பேருக்கும், மாஹேவில் 38 பேருக்கும் என மொத்தம் 619 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 49 ஆயிரத்து 593 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம் பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. இதில் தற்போது மருத்துவமனைகளில் புதுச்சேரியில் 860 பேர், காரைக்காலில் 54 பேர், ஏனாமில் 90 பேர், மாஹேவில் 32 பேர் என ஆயிரத்து 36 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் புதுச்சேரியில் 3,291 பேர், காரைக்காலில் 664 பேர், ஏனாமில் 201 பேர், மாஹேவில் 212 பேர் என 4 ஆயிரத்து 368 பேர் என மொத்தமாக 5 ஆயிரத்து 404 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி கருவடிக்குப்பத்தைச் சேர்ந்த 75 வயது முதியவர், முதலியார்பேட்டையைச் சேர்ந்த 80 வயது முதியவர், கஸ்தூரிபா நகரைச் சேர்ந்த 55 வயது ஆண், பெருமாள் கோயில் வீதியைச் சேர்ந்த 62 வயது முதியவர், ஏனாம் பகுதியைச் சேர்ந்த 70 வயது மூதாட்டி என 5 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 722 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.46 ஆக உள்ளது.
இன்று மாநிலம் முழுவதும் 283 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 467 (87.65 சதவீதம்) ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 7 லட்சத்து 43 ஆயிரத்து 184 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 536 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. இதுவரை மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 74 ஆயிரத்து 259 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.’’
இவ்வாறு சுகாதாரத்துறைச் செயலர் அருண் தெரிவித்துள்ளார்.