இரவு நேரப் பொது ஊரடங்கு நேற்று (ஏப்.20) இரவு தொடங்கிய நிலையில், பேருந்து சேவை இல்லாமலும், உணவு, குடிநீர் கிடைக்காமலும் திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் அவதிக்குள்ளாயினர்.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஏப்.20-ம் தேதி முதல் ஏப்.30-ம் தேதி வரை இரவு நேரப் பொது ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நேர ஊரடங்கையும், அதையொட்டி பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழ்நாடு அரசு பிறப்பித்தது.
இதன் தொடர்ச்சியாக அந்தந்தப் பேருந்து நிலையத்தில் இருந்து கடைசிப் பேருந்து இயக்கப்படும் நேரம் குறித்து முன்கூட்டியே மாவட்ட நிர்வாகங்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தன.
இதன்படி, இரவு நேரப் பொது ஊரடங்கின் முதல் நாளான நேற்று திருச்சி மாவட்டத்தில் முக்கிய இடங்கள், பிரதான சாலைகள் ஆகியவற்றில் இருந்த உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் இரவு 9 மணிக்கே அடைக்கப்பட்டன. நகரப் பேருந்து சேவை நிறுத்தப்பட்ட நிலையில், வெளியூர்களில் இருந்து திருச்சி வந்த பயணிகள் வாடகை வாகனங்களைத் தேடி அலைய நேரிட்டது. ஆனால், பெரும்பாலானோருக்குக் கிடைக்கவில்லை.
இதேபோல், போதிய பயணிகள் ஏறியதால் குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னதாகப் பேருந்துகள் புறப்பட்டுச் சென்று விட்டதாலும், பேருந்து சேவை இல்லாததாலும், வெளியூர்களில் இருந்து திருச்சி வந்து மதுரை, திருநெல்வேலி, சென்னை, சிதம்பரம், தஞ்சாவூர் உட்பட பல்வேறு ஊர்களுக்குச் செல்ல வேண்டியவர்கள் நேற்று மாலையில் இருந்து இன்று அதிகாலை 4 மணி வரை பேருந்து நிலையத்திலேயே காத்திருந்தனர். இவர்களில் பெண்கள், முதியவர்கள் பலர் இருந்ததால் போலீஸார் பேருந்து நிலையத்தில் ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.
உணவகங்கள், கடைகள் அடைக்கப்பட்டதால் உணவு, குடிநீர் கிடைக்காமல் பயணிகள் பலரும் அவதிப்பட்டனர். பலரும் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர். இதுதொடர்பாகப் பெண்கள் சிலர் கூறும்போது, "தேர்தலின்போது கூட்டம் கூட்டமாகக் கூடியதால்தான் கரோனா அதிகரித்துள்ளது. இந்த நிலையில், குறிப்பிட்ட நாட்களுக்கு சில மணி நேரம் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தினால் கரோனா கட்டுக்குள் வந்துவிடுமா? இந்த நடைமுறை எங்களுக்குத்தான் பல்வேறு வழிகளில் சிரமமாக உள்ளது" என்றனர்.
அதேவேளையில், மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் போலீஸார் ரோந்து சென்று கடைகளைக் குறித்த நேரத்தில் அடைக்குமாறு அறிவிப்பு செய்தனர்.
பல்வேறு சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து இரவு 10 மணிக்கு மேல் வந்த அனைத்து வாகனங்களையும் நிறுத்தி விசாரித்து, இரவு நேரப் பொது ஊரடங்கின் முதல் நாள் என்பதால் விடுவதாகவும், இன்று முதல் ஊரடங்கை மீறினால் அபராதம் விதிக்கப்படுவதுடன், வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் எச்சரித்து அனுப்பினர்.
இரவு நேர ஊரடங்கு குறித்து ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்ததால், நேற்று மாலையில் இருந்தே திருச்சி மாநகரில் பொதுமக்கள் நடமாட்டம் வழக்கத்தைவிடக் குறைவாக இருந்தது.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில், அந்தந்த ரயில் வருகைக்கு அரை மணி நேரத்துக்கு முன்னதாக மட்டுமே பயணிகள் ரயில் நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதனால், ரயில் நிலைய வளாகத்தின் பல்வேறு இடங்களில் திறந்த வெளியில் பயணிகள் காத்திருந்தனர்.