மற்ற நாடுகளைவிட இந்திய பாதுகாப்பு துறை வலிமையாக இருக்கிறது என்று மத்திய பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு கழக விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறினார்.
உற்பத்தி தொழிலுக்கான சர்வதேச ஆராய்ச்சி மையம் சார்பில் சிறந்த நிறுவனங்களுக்கு 2013-14ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடந்தது. அந்த மையத்தின் இயக்குநர் ஆனந்த் லாயி கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் (டி.ஆர்.டி.ஓ.) தலைமை கண்காணிப்பாளர் விஞ்ஞானி டாக்டர் ஏ.சிவதாணுபிள்ளை பங்கேற்றார்.
சிறந்த நிறுவனமாக தேர்வு செய்யப்பட்ட நியூ ஹாலந்து பிளாட் இந்தியா நிறுவனம், ஹசாராவில் உள்ள எல் அண்ட் டி நிறுவனத்துக்கு விருதுகளை வழங்கினார். இதேபோல 5 நிறுவனங்களுக்கு தங்கம், 5 நிறுவனங்களுக்கு வெள்ளி, 2 நிறுவனங்களுக்கு வெண்கல பதக்கங்களை வழங்கினார். நாடு முழுவதும் இருந்து 200-க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர், நிருபர்களிடம் விஞ்ஞானி சிவதாணு பிள்ளை கூறியதாவது:
சுதந்திரம் அடைந்த பிறகு, நம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த கவனம் செலுத்தி பல்வேறு திட்டங்கள் வகுக்கப் பட்டன. 1960-க்கு பிறகுதான் அறிவியல், தொழில்நுட்பத்தை மேம்படுத்த அறிவியல் தொழில் நுட்ப கொள்கை அறிவிக்கப் பட்டது. இதையடுத்து அணுசக்தி, ராணுவ பாதுகாப்பு, பயோடெக் னாலஜி உள்பட பல துறைகளில் முன்னேற்றம் கண்டுவருகிறோம். பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி துறையிலும் சிறந்து விளங்கு கிறோம்.
மற்ற நாடுகளைவிட நமது பாதுகாப்பு துறை வலிமையாக இருக்கிறது. அதற்கான, அதிநவீன தொழில்நுட்பத்திலும் நாம் சிறந்து விளங்குகிறோம்.
அணுமின் நிலையம் பாதுகாப்பானதே
நாட்டில் மின்பற்றாக்குறை அதிகரித்துள்ளது. எனவே, மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அணுமின் நிலையங்கள் பாதுகாப்பானதுதான். அவற்றின் பாதுகாப்பு அம்சங்களையும் உறுதிசெய்துகொண்டு, தொடர்ந்து அணுசக்தி மின்சாரத்துக்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
உலக நாடுகள் பட்டியலில் நாம் வளரும் நாடுகள் வரிசையில் இருக்கிறோம். எனவே, சுகாதாரம், உயர்கல்வி, தொழில்துறை உள்பட அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பெறுவதற்கு ஆராய்ச்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். ஒட்டுமொத்த வளர்ச்சி பெற்றால்தான் வளர்ந்த நாடாக நாம் மாற முடியும். நம் நாட்டில் 58 கோடி இளைஞர்கள் உள்ளனர். எனவே, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் தொழில்துறையை மேம்படுத்த வேண்டும்.
இவ்வாறு சிவதாணு பிள்ளை கூறினார்.