தமிழகம்

கரோனா சிகிச்சைக்கு போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன; மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் தகவல்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. கரோனா சிகிச்சைக்கு போதிய மருந்துகள் கையிருப்பில் உள்ளன என்று சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

இதுதொடர்பாக சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் அவர் நேற்று கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 4,487 கரோனா தடுப்பூசி மையங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி 16-ம் தேதிமுதல் தடையின்றி தடுப்பூசி போடப்படுகிறது.

சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசிடம் இருந்து 1 லட்சம் டோஸ் கோவேக்ஸின் தடுப்பூசிகளை பெற்றோம். இதுவரை 55.85 லட்சம் டோஸ் பெறப்பட்டதில், 48 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது (நேற்று) 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. அரசு மற்றும் தனியார் மையங்களுக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வமாக வருகின்றனர். அதனால், தடுப்பூசி மையங்களில் கூட்டம் அதிகரித்துள்ளது. தடுப்பூசி வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்படுகிறது. பொதுமக்கள் தடுப்பூசி குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்.

வரும் 1-ம் தேதி முதல் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இன்னும் சில தினங்களில் 5 லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வரவுள்ளது.

தமிழகத்தில் மருத்துவமனைகளில் தினமும் 240 டன் ஆக்சிஜன் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், ஆக்சிஜன் உற்பத்தி 400 டன்னாக இருக்கிறது. தமிழகத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை. வேலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழந்ததற்கும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை.

போதிய மாத்திரை, மருந்துகள் கையிருப்பில் உள்ளன. தமிழகத்தில் கரோனா சிகிச்சைக்கு போதியபடுக்கைகள் இருக்கின்றன. கண்காணிப்பு மையங்களிலும் படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரே மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். கரோனா தொற்றுக்கு சித்தா சிகிச்சை கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.

கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை பரிசோதனை செய்து கண்காணிக்கும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள் ரெம்டிசிவிர் மருந்தை கூடுதல் விலைக்கு விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT