மதுராந்தகம் அருகேயுள்ள வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு ஆண்டுதோறும் பல நாடுகளில் இருந்து 26 வகையான பறவைகள் வருகின்றன. இவ்வாறுவரும் பறவைகள் இங்கு தங்கிமுட்டையிட்டு, குஞ்சு பொறிக்கின்றன. இனப்பெருக்க காலம் முடிந்து மே, ஜூன் மாதங்களில் இவை திரும்பிச் செல்லும்.
கடந்த 2 ஆண்டுகளாக தண்ணீர் இல்லாமல் ஏரி வற்றியதால், பறவைகள் வரத்து குறைந்தது. கரோனா பரவல் எதிரொலியாக ஓராண்டுக்கு மேலாக மூடப்பட்டிருந்த பறவைகள் சரணாலயம், கடந்த ஜனவரி 10-ம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது.
பின்னர், மழை பெய்து வேடந்தாங்கல் ஏரி நிரம்பியதால், பறவைகளும் தற்போது அதிக அளவு வந்துள்ளன. இந்நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரனோ பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மூடப்பட்டுவிட்டன. இதையொட்டி, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் நேற்று மூடப்பட்டது. மறு உத்தரவு வரும் வரை சரணாலயம் மூடப்பட்டிருக்கும், கரோனா தொற்று குறைந்து, இயல்புநிலை திரும்பிய பின்னரே, சரணாலயம் திறக்கப்படும் என்று ஊழியர்கள் தெரிவித்தனர்.