சென்னையில் கனமழைக்கு பிறகு சாலைகளில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பல்வேறு சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் மாநகரின் பல்வேறு சாலைகளில் மண் படிவுகளும், சாலைகளில் பழுதும் ஏற்பட்டன. தற்போது வெள்ளம் வடிந்த நிலையில், சாலைகளில் படிந்த மண் உலர்ந்து, தூசு மண்டலமாக மாறியுள்ளது. இதை சுவாசிக்கும் வாகன ஓட்டிகள், சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். திருமங்கலம்- கிண்டி வரையிலான சாலை, மாதவரம் வழியாகச் செல்லும் ஜிஎன்டி சாலை மற்றும் பல்வேறு பேருந்து சாலைகளில் காற்று மாசு கடுமையாக உள்ளது.
மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆலந்தூர் பஸ் நிறுத்தம் அருகில் 24 மணி நேரமும் தொடர்ந்து காற்று மாசு கண்காணிக்கப்பட்டு வருகிறது. அக்கண்காணிப்பு மையத்தில் பதிவான தகவல்களின்படி, கடந்த டிசம்பர் 1-ம் தேதி, அப்பகுதியில் காற்றில் கலந்துள்ள 2.5 மைக்ரான் அளவு கொண்ட நுண் தூசு துகள்கள், அப்பகுதியில் ஒரு கனமீட்டர் காற்றில் 126 மைக்ரோகிராம் அளவுக்கு இருந்துள்ளது. மழைநீர் வடிந்து வந்த நிலையில் கடந்த 8-ம் தேதி அதிகபட்சமாக ஒரு கனமீட்டரில் 500 மைக்ரோகிராம் அளவுக்கு காற்று மாசு உயர்ந்தது.
பிறகு வந்த நாட்களில் தினமும் சுமார் 300 முதல் 350 மைக்ரோகிராம் வரை காற்று மாசு பதிவாகியுள்ளது. நேற்றைய (சனிக்கிழமை) நிலவரப்படி 316 மைக்ரோகிராம் பதிவாகியுள்ளது. மாசுக்கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி காற்றில் 60 மைக்ரோகிராம் மாசு மட்டுமே இருக்கலாம். ஆனால் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக அனுமதிக்கப்பட்ட அளவை விட 5 மடங்குகளுக்கு மேல் காற்று மாசு இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செங்குன்றத்தை சேர்ந்த திலீபன் இதுபற்றி கூறும்போது, “இந்த சாலையில் சென்றால் ஆடைகள் முழுவதும் தூசு படிந்து, ஆடையின் நிறமே பழுப்பு நிறமாக மாறிவிடுகிறது. புழுதி நிறைந்த காற்றை சுவாசிப்பதால், ஒவ்வாமை காரணமாக கடுமையான இருமல், சளித் தொல்லை போன்றவை ஏற்படுகிறது. கண் எரிச்சலும் ஏற்படுகிறது. அரசு சார்பில் துரிதமாக குப்பைகளை அகற்றியது போன்று சாலைகளில் உள்ள மண்ணையும் அகற்ற வேண்டும்” என்றார்.
இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “சாலைகளில் வெள்ளத்தால் படிந்துள்ள மண்ணை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 92 சாலைகளை சீரமைக்க ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்படும்” என்றார்.
மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “கடந்த சில தினங்களாக நவீன இயந்திரங்களைக் கொண்டு இரவு நேரங்களில், சாலையில் படிந் துள்ள மண் அகற்றப்பட்டு வருகி றது. பழுதான சாலைகளும் கணக் கெடுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைக்கப்படும்” என்றார்.