வேலூரில் காய்கறி கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டதால் நேதாஜி மார்க்கெட் பகுதியை மாநகராட்சி அதிகாரிகள் இரும்பு தகரத்தை வைத்து அடைத்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கரோனா பரவல் அதிகரிப்பால் பொதுமக்கள் அதிகம் கூடும் வேலூர் நேதாஜி மார்க்கெட் மற்றும் உழவர் சந்தைகளை மூடி வேறு இடங்களுக்கு மாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, காட்பாடி உழவர் சந்தை காட்பாடி டான்போஸ்கோ பள்ளியிலும், வேலூர் டோல்கேட் உழவர் சந்தை தொரப்பாடி அரசினர் மேல்நிலை பள்ளி வளாகத்திலும், குடியாத்தம் உழவர் சந்தை குடியாத்தம் நகராட்சி மேல்நிலை பள்ளியில் அதிகாலை 4 மணி முதல் பகல் 12 மணி வரை இயங்கும்.
வேலூர் நேதாஜி மார்க்கெட் காய்கறி மொத்த விற்பனை மாங்காய் மண்டி, நேதாஜி மார்க்கெட் சில்லறை விற்பனை கடைகள் பழைய மீன்மார்க்கெட் வளாகத்திலும் அதிகாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நேதாஜி மார்க்கெட் பூக்கடை மொத்த வியாபாரம் அதே இடத்தில் அதிகாலை 4 மணி முதல் காலை 10 மணி வரை இயங்கும் என்றும், நேதாஜி மார்க்கெட் பூக்கடை சில்லறை வியாபாரம் டவுன் ஹால் பகுதியில் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியாபாரிகள் அதிருப்தி
வேலூர் நேதாஜி மார்க்கெட்காய்கறி மொத்த வியாபாரிகளுக் காக மாங்காய் மண்டி அருகில் தற்காலிக கடைகள் அமைக்கப் பட்டுள்ளன. இங்கு, சுமார் 120 வியாபாரிகளுக்கு கடைகள் அமைக்க வேண்டும். ஆனால், 85 கடைகள் மட்டும் அமைத்துள் ளதால் மீதமுள்ள வியாபாரிகள் காய்கறி மொத்த வியாபாரம் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.
அதேநேரம், மாநகராட்சி அதிகாரிகள் சிலர் இந்தப் பகுதியில் தனி நபர் ஒருவருக்காக 15 வேன்கள் மூலம் காய்கறி வியாபாரம் செய்வதற்கு அனுமதிக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இதற்கு, காய்கறி வியாபாரிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஏற்கெனவே வியாபாரிகளுக்கு கடைகள் இல்லாத நிலையில் தனி நபர் ஒருவரின் விருப்பத்துக்காக மாநகராட்சி அதிகாரிகள் வேன்கள் மூலம் காய்கறி வியாபாரம் செய்ய அனுமதித்தால் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
நேதாஜி மார்க்கெட் அடைப்பு
வேலூர் நேதாஜி மார்க்கெட் மொத்த காய்கறி மற்றும் சில்லறை காய்கறி விற்பனை கடைகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் சாரதி மாளிகையின் நுழைவு வாயில் பெரும்பகுதியை தகரம் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் அடைத்துள்ளனர். அதேபோல், காய்கறி மார்க்கெட் பகுதிக்குச் செல்ல வேண்டிய அனைத்து பாதைகளையும் தகரத்தை கொண்டு அடைத்துள்ளனர்.