முல்லைப் பெரியாறு அணையில் துணை கண்காணிப்புக்குழு இன்று ஆய்வு செய்தது. இதில் நில அதிர்வு அளவீடு கருவி, சோலார் பேனல் போன்றவற்றை பொருத்தும் இடங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அப்போது அணையைக் கண்காணித்து பராமரிக்க மூவர் கண்காணிப்பு குழுவையும், இதற்கு உதவி செய்வதற்காக ஐந்து பேர் கொண்ட துணைக்குழுவையும் நியமித்தது.
இந்த துணைக்குழு நீர்மட்ட உயர்விற்கு ஏற்ப அணையை ஆய்வு செய்து கண்காணிப்புக் குழுவிற்கு அதன் அறிக்கையை தாக்கல் செய்யும்.
இந்த துணைக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் சரவணக்குமார் உள்ளார். தமிழகம் தரப்பில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சாம்இர்வின், உதவிப் பொறியாளர் குமார் ஆகியோரும், கேரளா தரப்பில் நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் ஹரிக்குமார், உதவிப்பொறியாளர் பிரசீத் ஆகியோரும் உள்ளனர்.
இக்குழு இன்று முல்லைப் பெரியாறு அணையைப் பார்வையிட்டது.
அணைப்பகுதியில் செய்யப்படவேண்டிய மராமத்துப் பணிகள், மதகுப்பகுதி, கசிவுநீர் வெளியேற்றம் உள்ளிட்டவை குறித்தும் ஆய்வு செய்தனர்.
நில அதிர்வு அளவீடு கருவி மற்றும் சோலார் பேனல் போன்றவற்றை பொருத்தும் இடங்களை ஆய்வு செய்தனர். போதுமான நீர் இருப்பு உள்ளதுடன், மழை பெய்வதற்கான சூழ்நிலையும் உள்ளதால் இந்த ஆண்டு முதல்போகத்திற்கு ஜூன் முதல் வாரமே நீர்திறக்க வாய்ப்புள்ளதாகவும் குழுவினர் தெரிவித்தனர்.
தற்போது பெரியாறு அணையின் நீர்மட்டம் 126.65 அடியாகவும், நீர் இருப்பு 3974 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் தலா 100 கனஅடியாகவும் உள்ளது.