ரெம்டெசிவர் மருந்து ஜிப்மரில் இல்லை என்று திமுக குற்றம் சாட்டியுள்ளது. இந்த மருந்து வாங்க நடவடிக்கையே ஜிப்மரில் இல்லை என்பதால், இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, எஸ்.சி/எஸ்.டி ஊழியர் நலச்சங்கமும் புகார் மனு தந்துள்ளது. இதனால் நோயாளிகள் தவிக்கின்றனர்.
புதுச்சேரியில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ரெம்டெசிவர் மருந்து பற்றாக்குறையாக இருந்ததால் துணைநிலை ஆளுநர் தமிழிசை நேரடியாக தெலங்கானா சென்று அவரது முயற்சியால் மருந்துகளை வாங்கி வந்தார்.
ஜிப்மரில் கையிருப்பில் இல்லை - திமுக
இந்நிலையில், திமுக தெற்கு மாநில அமைப்பாளர் சிவா எம்எல்ஏ கூறுகையில், "கரோனா நோய்க்கு ஆளாகி அபாயக் கட்டத்திற்குச் செல்பவர்களுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து செலுத்தப்பட்டு வருகிறது. இந்த மருந்து ஒன்றுதான் அவர்களை அபாயக் கட்டத்தில் இருந்து மீட்க உதவுகிறது. இது ஒரு நபருக்கு 6 முறை செலுத்த வேண்டியுள்ளது.
ஆனால், இந்த மருந்து ஜிப்மர் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கையிருப்பில் இல்லை. மேலும், புதுச்சேரியிலும் இந்த மருந்து கிடைப்பதில்லை. ஆனால், அபாயக் கட்டத்திற்குச் செல்லும் நோயாளிகளை மீட்க மருத்துவர்கள் இந்த மருந்துதான் வேண்டும் என்று நோயாளிகளின் உறவினர்களிடம் தெரிவிக்கின்றனர். இதனையடுத்து, மருத்துவர்களின் சீட்டுடன் நோயாளிகளின் உறவினர்கள் அலைகின்றனர்.
குறிப்பாக, ஏழை மற்றும் நடுத்தர மக்கள் அந்த மருந்துகளை வாங்கப் பணமின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஆளுநர் இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.
மருந்து வாங்க நடவடிக்கையே இல்லை - இயக்குநரிடம் புகார்
இந்நிலையில், ஜிப்மர் எஸ்.சி., எஸ்.டி மற்றும் எம்ஆர்டிஎஸ் ஊழியர் நலவாழ்வு சங்கப் பொதுச் செயலாளர் வேல்முருகன், ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வாலுக்கு அனுப்பியுள்ள மனுவில், "ஜிப்மரில் ரெம்டெசிவர் மருந்து முற்றிலும் இல்லை. அதே நேரத்தில், ஆளுநர் முயற்சியால் புதுச்சேரி அரசிடம் இம்மருந்து உள்ளது. தேசிய அளவில் முக்கிய நிறுவனமான ஜிப்மர், இம்மருந்தை வாங்க நடவடிக்கை எடுக்கவில்லை.
ஜிப்மரில் ஊழியர்கள், நோயாளிகள் எனப் பலரும் கரோனா சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஜிப்மர் தலைமை இவ்விஷயத்தில் தலையிட்டு உடனடியாக ரெம்டெசிவர் மருந்து வாங்க உத்தரவிட வேண்டும். பல மருந்து நிறுவனங்கள் இம்மருந்தை ஜிப்மருக்குத் தரத் தயாராக உள்ளதை அறிந்து விரைந்து செயல்படவேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.