சாத்தனூர் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதித்து நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. 
தமிழகம்

கரோனா பரவல்: சாத்தனூர் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வரத் தடை

இரா.தினேஷ்குமார்

கரோனா தொற்றுப் பரவல் எதிரொலியாக திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணைக்கு சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுப் பரவல் அதிவேகமாகப் பரவி வருகிறது. கரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை கடந்த 15 நாட்களில் பல மடங்கு உயர்ந்துள்ளது. உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. இதன் எதிரொலியாக, கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு, பூங்கா மற்றும் பொழுதுபோக்கு இடங்களில் மக்கள் கூடுவதைத் தடுப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இன்று (ஏப். 20) முதல் அமலுக்கு வந்துள்ளன.

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அணையைச் சுற்றிப் பார்க்கவும், அணையில் உள்ள பூங்காவில் விளையாடி மகிழவும் மற்றும் முதலை பண்ணை உள்ளிட்ட இடங்களுக்குச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, சாத்தனூர் அணையின் நுழைவு வாயில் கதவு பூட்டப்பட்டு இன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, சாத்தனூர் அணையின் நுழைவு வாயில் கதவில் பொதுப்பணித் துறையினர் வைத்துள்ள அறிவிப்புப் பலகையில், ''கரோனா தொற்று காரணமாக தமிழக அரசின் அறிவுரைப்படி சாத்தனூர் அணை பூங்காவில் இன்று முதல் அரசின் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஜவ்வாது மலையில் உள்ள கோலப்பன் ஏரி மற்றும் பீமன் நீர்வீழ்ச்சிக்குச் செல்லவும் பொதுமக்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT