கமல் | படம்: எல்.சீனிவாசன் 
தமிழகம்

செயலிழக்கும் சிசிடிவி கேமராக்கள், மர்ம கண்டெய்னர்கள், திடீர் வைஃபை வசதி: வாக்கு எண்ணும் மையங்கள் குறித்து கமல் சந்தேகம்

செய்திப்பிரிவு

வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயல் இழந்து விடுவதும், மர்ம கண்டெய்னர்கள் நள்ளிரவில் வளாகங்களுக்குள் நுழைவதும், திடீரென வைஃபை வசதிகள் வளாகங்களுக்கு உள்ளும் வெளியேயும் உருவாவதும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புவதாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கமல்ஹாசன் தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில், தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூவைச் சந்தித்து மனு அளித்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:

''வாக்கு எண்ணிக்கை மையங்களில் சிசிடிவி கேமராக்கள் அடிக்கடி செயல் இழந்து விடுவதும், மர்ம கண்டெய்னர்கள் நள்ளிரவில் வளாகங்களுக்குள் நுழைவதும், திடீரென வைஃபை வசதிகள் வளாகங்களுக்கு உள்ளும் வெளியேயும் உருவாவதும், லேப்டாப் உடன் மர்ம நபர்கள் நடமாடுவதும் பல்வேறு விதமான கேள்விகளை எழுப்புகின்றன.

வாக்குகள் பாதுகாப்பில் பல்வேறு சந்தேகங்கள் கிளம்புகின்றன. பல மர்மமான விஷயங்கள் நிகழ்கின்றன. பல வாகனங்கள் வேளை கெட்ட வேளைகளில் வருவதும், புதிதாகக் கட்டிடப் பணிகள் திடீரென நடக்கத் தொடங்குவதும் சந்தேகத்திற்கு இடம் அளிக்கின்றன. இவைதான் எங்களுடைய முகவர்கள் தெரிவித்துள்ள கருத்தின் சாராம்சம்.

தேர்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை மையங்களில் விதிமுறைகளைக் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும். தேர்தல் முறையாக நடத்தப்பட்டு, முடிவுகள் நேர்மையாக அறிவிக்கப்படுகின்றன எனும் நம்பிக்கையை வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஏற்படுத்த வேண்டும். இது தேர்தல் ஆணையத்தின் கடமை.

ஏற்கெனவே 30 சதவீத வாக்காளர்கள் தங்களின் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுவதில்லை. வாக்கு எண்ணிக்கையிலும் இதுபோன்ற மர்மங்களும் சந்தேகங்களும் நீடித்தால் பொது மக்களின் ஜனநாயகப் பங்களிப்பு இன்னும் குறையும் அபாயம் உண்டு. அது ஜனநாயகத்திற்கே ஆபத்தாக முடியும்.

வாக்காளர் பட்டியல் குளறுபடிகளையும் புகாராக விரிவாக அளித்திருக்கிறோம். இதுதவிர ஏராளமான புகார்களையும் ஒன்றுதிரட்டி, தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்க உள்ளோம். இது எங்களைக் காப்பாற்றிக் கொள்ளும் முயற்சி மட்டுமல்ல, ஜனநாயகத்தையே காப்பாற்றும் முயற்சி''.

இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT