கே.சுப்பராயன்: கோப்புப்படம் 
தமிழகம்

ஜவுளி ஆலைகள், பனியன் தொழில்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்கு: கே.சுப்பராயன் எம்.பி. வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

தமிழ்நாட்டில் ஜவுளி ஆலைகள், பனியன் தொழில்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி., கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, கே.சுப்பராயன் இன்று (ஏப். 20) தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சனுக்கு எழுதிய கடிதம்:

"தமிழ்நாட்டில், விவசாயத் தொழிலுக்கு அடுத்ததாக வேலைவாய்ப்பளிக்கும் தொழில்துறை, ஜவுளி சார்ந்த தொழில்களாகும். தற்போது மாநில அரசு அறிவித்துள்ள, 20-ம் தேதி முதல் ஊரடங்கு அறிவிப்பில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜவுளித் தொழில், குறிப்பாக பனியன் உற்பத்தி, ஆயத்த ஆடை உற்பத்திகள் பெரும்பகுதி ஏற்றுமதி சார்ந்ததாகும். ஏற்றுமதி என்பது குறிப்பிட்ட காலத்திற்குள் பணி முடித்து அனுப்பப்பட வேண்டிய ஒன்றாகும்.

எனவே, இதன் தன்மை என்பது, இரவு ஷிஃப்ட் செய்வதன் மூலம்தான் காலத்தில் பணிகளை முடித்து ஏற்றுமதிக்கு அனுப்ப இயலும் என்பதாகும். இதனால் இரவு ஷிஃப்ட் என்பது இத்தொழில் துறையில் தவிர்க்க முடியாத ஒரு அவசரத் தேவையாகவுள்ளது. ஜவுளித் தொழிலின் தன்மை இத்தகையதாக இருப்பதை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.

எனவே, தமிழ்நாட்டில் ஜவுளி ஆலைகள், பனியன் தொழில்கள், ஆயத்த ஆடை தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊரடங்கிலிருந்து விலக்களிக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

முகக்கவசம், தனிமனித இடைவெளி, இதர பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கறாராக ஏற்று அமலாக்குவதன் நிபந்தனைகளோடு அனுமதிக்கலாம் எனக் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு கே.சுப்பராயன் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT