கரோனா பரவல் அதிகரிப்பால் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலாத்தலங்களும் இன்று முதல் மூடப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் மாவட்டத்துக்கு வருவதுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால், மக்கள் நடமாட்டம் இல்லாமல் சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடின.
முக்கிய சுற்றுலாத் தலமான நீலகிரி மாவட்டத்துக்கு தமிழ்நாடு மட்டுமன்றி வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு இன்று முதல் அமல்படுத்தியுள்ளது. மேலும், நீலகிரி மாவட்டம், கொடைக்கானல் உட்பட்ட சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் உத்தரவின் பேரில் இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களும் மூடப்பட்டன.
நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளதால் கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
இந்நிலையில், தற்போது சுற்றுலாத்தலங்களை மூடவும், சுற்றுலாவுக்கு அரசு தடை விதித்துள்ளதால் நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர் ஆகிய சுற்றுலா தலங்கள் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடின.
மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா கூறும்போது, ‘நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளன. அதனால் சுற்றுலாபயணிகள் வர தடை உள்ளது. மாவட்டத்துக்கு வருபவர்களுக்கு இ பதிவு கட்டாயம் தேவை. அதனைக் கண்காணிக்க மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகளில் வருவாய் துறை, காவல் துறையைக் கொண்ட சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாவை தவிர அத்தியாவசிய தேவைகளுக்கு மற்றும் வியாபார நிமித்தம் வருபவர்கள் உரிய ஆவணங்களோடு வரலாம், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கின் போது மருத்துவம் தவிர பிற அன்றாட வியாபார நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்.
மாவட்டத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தேவையான அளவு உள்ளது . 1800 டோஸ் தடுப்பூசி மருந்து கையிருப்பில் உள்ளது’ என்றார்.