தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 22மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு வழக்கமான அளவைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரைவெப்பம் அதிகரிக்க வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் நா.புவியரசன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
5 டிகிரி வரை அதிகரிக்கும்
20, 21-ம் தேதிகளில் நேற்கு திசையில் இருந்து தரைக்காற்று வீச வாய்ப்புள்ளதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிபேட்டை, வேலூர்,திருப்பத்தூர், தருமபுரி, சேலம்,நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம்பலூர், அரியலூர்,நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சிமற்றும் கரூர் ஆகிய 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கக் கூடும்.
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் 50 முதல்80 சதவீதம் வரை இருக்கக் கூடும் என்பதால் பிற்பகல் முதல் காலை வரை புழுக்கமாகவும், இயல்புக்கு மாறாக அதிக வியர்வை வெளியேறவும் வாய்ப்புள்ளது.
மழை வாய்ப்பு
வெப்பச்சலனம் காரணமாக 20-ம் தேதி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 21, 22, 23-ம்தேதிகளில் மேற்கு தொடர்ச்சிமலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.