தமிழகம்

வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை; காலாவதியான குளிர்பானங்கள் அதிக அளவில் விற்பதாக புகார்: உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தகவல்

செய்திப்பிரிவு

கடைகளில் காலாவதியான குளிர்பானம் விற்கப்படுவதாக வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

தமிழகம் முழுவதும் உணவகங்களில் சுகாதாரமற்ற உணவுகள் விற்பனை, மளிகை கடைகளில் காலாவதி பொருட்கள் விற்பனை, தடை செய்யப்பட்ட பான்பராக் உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை தொடர்பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்க 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதொடங்கப்பட்டது. இந்த எண்ணைதொடர்பு கொண்டு பொதுமக்களும் புகார் அளித்து வருகின்றனர்.

இவ்வாறு, பெறப்படும் புகாரின் அடிப்படையில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்களும் கள ஆய்வு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்தச் சூழலில், தமிழகம் முழுவதும் கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் தினமும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் குளிர்பானம், தண்ணீர் கேன் உள்ளிட்டவற்றின் விற்பனை அதிகரித்து வருகிறது. அதேநேரம், கடைகளில் காலாவதியான குளிர்பானம், சுத்தம் செய்யப்படாத குடிநீர் நிரப்பப்பட்ட தண்ணீர் கேன்கள் விற்பனை செய்யப்படுவதாக கடந்த 2 மாதங்களாக உணவு பாதுகாப்பு துறைக்கு வரும் புகார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

அதிக புகார்கள்

காலாவதியான குளிர்பானங்கள், தண்ணீர் கேன், சுத்தம் செய்யப்படாமல் சாதாரண குடிநீரை தண்ணீர் கேனில் அடைத்து விற்பனை செய்யப்படுவது போன்ற புகார்கள் வருவது தற்போது அதிகரித்துள்ளது.

மொத்தம் பதிவாகும் புகார்களில் 10 சதவீதம் குளிர்பானம், தண்ணீர் தொடர்பான புகார்கள் வருகின்றன. புகார்களின் உண்மை தன்மையை கண்டறிந்து தவறு கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட வியாபாரிகளின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT