ஆசனூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து நின்ற ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது வனப்பகுதியை விட்டு வெளியேறி, சாலையோரம் நின்று தீவனங்கள் உட்கொள்வதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாகி வருகிறது.
இந்நிலையில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆசனூர் அருகே, வனப்பகுதியில் இருந்து வெளியேறி சாலைக்கு வந்த ஒற்றை காட்டுயானை அவ்வழியாக சென்ற வாகனங்களை நேற்று வழிமறித்து நின்றது.
இதனால், வாகனங்களை நிறுத்திவிட்டு அச்சத்துடன் பயணிகள் காத்திருந்தனர். சாலையில் நின்ற வாகனங்களை நோக்கி முன்னேறி வருவதும், சாலையின் இரு முனைகளுக்கும் சென்று வருவதுமாக யானை சிறிது நேரம் அச்சப்படுத்தியது. சிறிது நேரத்திற்குப் பின்னர் யானை வனப்பகுதிக்குள் சென்றதும் போக்குவரத்து சீரானது.
கோடைகாலம் என்பதால் வனப்பகுதியில் வறட்சியாக இருக்கும் என்பதால், குடிநீர் மற்றும் உணவு தேடி யானைகள் சாலைப்பகுதிக்கு வந்திருக்கும் எனத் தெரிவித்த வனத்துறையினர், சாலையில் யானைகள் நின்றாலோ, கடந்து சென்றாலோ அவற்றை தொந்தரவு செய்யாமல் வாகன ஓட்டிகள் அமைதி காக்க வேண்டும் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.