ஈரோடு மாவட்டம் பவானி அடுத்துள்ள ஜம்பை பேரூராட்சிக்குட்பட்ட நல்லி பாளையத்தில் கிராம மக்கள் செம்மறி ஆடுகளை வீடுகளில் வளர்த்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக பட்டியில் வளர்த்து வரும் ஆடுகளை, இரவு நேரங்களில் மர்ம விலங்கு வேட்டையாடி வருகிறது.
கடந்த வாரம் பூர்ணம் என்பவர் வளர்த்து வந்த 12 ஆடுகள் இறந்தன. இந்த சம்பவத்தில் ஆய்வு மேற்கொண்ட வனத்துறையினர் கிராமத்தைச் சேர்ந்த நாய் கடித்ததால்தான் ஆடுகள் இறந்ததாகத் தெரிவித்தனர். இந்நிலையில், மர்ம விலங்குகளால் ஆடுகள் கடிக்கப்படும் சம்பவம் தொடர்ந்ததால், இப்பகுதி மக்கள் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங் களை நடத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, இந்த கிராமப்பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ளதா என்பதைக் கண்காணிக்கும் வகையில், அந்தியூர் வனத்துறையினர் தானியங்கி கண்காணிப்பு கேமராக்களை இரு இடங்களில் அமைத்துள்ளனர். மேலும், இரவு நேர ரோந்து பணியை மேற்கொள்ளப்பட உள்ளதால், கிராம மக்கள் அச்சப்பட வேண்டாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.