சலுகையை மேலும் ஒரு வாரம் நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு
வெள்ள நிவாரணப் பொருட்களைக் கொண்டுவர வசதியாக தமிழகம் முழு வதும் சுங்கச் சாவடிகளில் அளிக்கப்பட்ட கட்டண விலக்கு சலுகை வரும் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு செல்ல வசதியாக மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகம் கடந்த 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் சுங்கச் சாவடிகளில் கட்டண வசூலுக்கு விலக்கு அளித்து உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த சலுகை நேற்றுடன் முடிவடைந்தது.
இதற்கிடையே, தமிழகத்தில் வெள்ள நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடந்து வருவதால் சுங்கக் கட்டண விலக்கு சலுகையை மேலும் ஒரு வாரம் நீட்டிக்குமாறு தமிழக லாரி உரிமையாளர் சம்மேளனம் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தது.
இந்நிலையில், சுங்கக் கட்டண விலக்கு சலுகையை மத்திய அரசு மேலும் ஒரு வாரம் நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய நெடுஞ்சாலை ஆணையத் தலைவருக்கு மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சக இயக்குநர் (சுங்க கட்டணம்) என்.கே.சர்மா அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழகத்துக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சுங்கச் சாவடிகளில் அளிக்கப்பட்ட கட்டண விலக்கு சலுகையை மேலும் 7 நாட்களுக்கு, அதாவது டிசம்பர் 18-ம் தேதி வரை நீட்டிக்க தரைவழி போக்குவரத்து அமைச்சகம் முடிவுசெய்துள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும் டிசம்பர் 18-ம் தேதி வரை கட்டண வசூல் நிறுத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.