இந்தியாவில் கரோனா இரண்டாவது அலை பரவலை மத்திய அரசு அலட்சியமாக கையாண்டதன் விளைவே தடுப்பூசி பற்றாக்குறை, ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது, இதற்கு முழுக்க முழுக்க பிரதமரே பொறுப்பு என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று வெளியிட்ட அறிக்கை:
“கரோனாவின் கொடிய இரண்டாவது அலையை மக்கள் எதிர்கொண்டிருக்கிற அவலநிலையில், பாஜக ஆட்சி செய்யும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்வாரில் நடைபெற்ற கும்பமேளாவில் 30 லட்சம் பேர் நீராடியிருக்கிறார்கள். அங்கே அப்பட்டமான கரோனா விதிமீறல்கள் நடைபெற்றுள்ளன. ஒரே இடத்தில் லட்சக்கணக்கான மக்களை மாதக் கணக்கில் புனித நீராட பாஜக அரசு எப்படி அனுமதித்தது ? தப்லிக் ஜமாத்தை 'கரோனா ஜிகாத்' என்று குற்றம் சாட்டிய பாஜக, கும்ப மேளாவில் 30 லட்சம் பேரை நீராட அனுமதிக்கலாமா ?
இத்தகைய கொடூரமான நிலை நாட்டில் நிலவுகிற போது, காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி மக்கள் நலனில் அக்கறை கொண்டு தமது மேற்குவங்க தேர்தல் பரப்புரையை ரத்து செய்திருக்கிறார். ஆனால், தங்களது தேர்தல் பரப்புரையை பிரதமர் மோடியும், அமித்ஷாவும் தொடர்ந்து மேற்கொள்வது இந்திய மக்களின் உயிரை துச்சமென மதித்து, ஆதாயம் தேடுகிற நோக்கத்தில் பரப்புரை மேற்கொள்தை வன்மையாக கண்டிக்கிறேன்.
ஒரு பொறுப்பற்ற பிரதமரை இந்த நாடு பெற்றிருப்பதால் கடுமையான பாதிப்புகளையும், வாழ்வாதார இழப்புகளையும் இந்திய மக்கள் எதிர்கொள்ள வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இத்தகைய அனைத்து துன்பங்களுக்கும் பிரதமர் மோடி தலைமையில் இருக்கும் பாஜக ஆட்சிதான் காரணம் என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறேன்.
கடந்த கால கரோனா தொற்றினால் ஏற்பட்ட உயிர்ச் சேதத்தையும், பொருளாதார பேரழிவையும் குறித்து, மத்திய அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டதற்கு ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைப்பதில் நடந்து கொண்ட அணுகுமுறையை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். நீண்டகால விவாதங்களுக்கு பிறகு, கடந்த 2020 அக்டோபர் 21 அன்று 162 மாவட்டங்களில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் அமைக்க ரூ.202 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அந்த நிலையங்கள் தொடங்குவதற்கு நிதியை ஒதுக்குவதில் காலதாமதம் செய்த காரணத்தால் அவற்றால் உரிய காலத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய முடியவில்லை. இதில், பல நிறுவனங்களின் கட்டுமானப் பணிகள் நிறைவடையவில்லை. இதனால், மாதத்திற்கு 4500 மெட்ரிக் டன் உற்பத்தி திறன் கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்கள் செயல்படாமல் முடங்கியுள்ளன.
அதை ஈடுகட்ட மத்திய பாஜக அரசு தற்போது 50 ஆயிரம் மெட்ரிக் டன் ஆக்சிஜனை இறக்குமதி செய்யவும், தனி ரயில்களில் மாவட்டங்களுக்கு ஆக்சிஜனை அனுப்பவும் முடிவு செய்திருக்கிறது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்று சொல்வார்கள். அதைத் தான் இன்றைக்கு பாஜக அரசு செய்து கொண்டிருக்கிறது.
எனவே, இந்திய மக்களை காப்பாற்றுகிற முயற்சியில் பிரதமர் மோடி உடனடியாக ஈடுபடவில்லையெனில், பாஜக அரசு கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.