பொது இடங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள சிலைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தஞ்சையைச் சேர்ந்த வைரசேகர், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் முறையாக அனுமதி பெற்றும், அனுமதி பெறாமலும் பல்வேறு தலைவர்களின் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளுக்கு அரசியல்வாதிகள் போட்டிப் போட்டு மரியாதை செய்கின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல், சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில இடங்களில் சிலைகளுக்கு 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
எனவே, தமிழகம் முழுவதும் அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ள தலைவர்களின் சிலைகளின் அருகே அமைக்கப்பட்டிருக்கும் ஏணிகளை அகற்றவும், அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை அகற்றவும், புதிதாக சிலை அமைக்க அனுமதி வழங்கக்கூடாது என்றும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து,பொது இடங்களில் அனுமதி பெறாமல் அமைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளையும் அகற்ற தேசிய நெடுஞ்சாலைத்துறை, வருவாய் துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.