கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அரசு தடை விதித்ததையடுத்து, தங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் எனக் கூறியும், தடையை ரத்து செய்ய வலியுறுத்தியும் சுற்றுலாத் தொழில்புரிவோர் மற்றும் பொதுமக்கள் மூஞ்சிக்கல் பகுதியில் இன்று அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் கரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்ததை அடுத்து ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் முழுவதும் உள்ள பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகளை நம்பித் தொழில்புரிந்து வருகின்றனர். கடந்த ஆண்டு கோடை சீசனில் கரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சுற்றுலாப் பயணிகளுக்கு முற்றிலும் தடை விதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாத் தொழில்புரிவோர் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதில் இருந்து கடந்த சில மாதங்களாக படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால், சுற்றுலாவை நம்பி பல்வேறு தொழில்கள் செய்து வருவோர் மீண்டுவந்தனர்.
இந்நிலையில் இன்று முதல் கொடைக்கானலுக்குச் சுற்றுலாப் பயணிகள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக் கூறியும், தடையை நீக்கிக் கட்டுப்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க வலியுறுத்தியும் கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம், சுற்றுலா வாகன ஓட்டிகள் சங்கம், ஒருங்கிணைந்த வர்த்தகர்கள் சங்கம் உள்ளிட்ட சுற்றுலாத் தொழில் புரியும் பல்வேறு சங்கங்கள் கலந்துகொண்டன. 500-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் பங்கேற்றனர்.
போராட்டம் நடத்தியவர்கள் மத்தியில் கொடைக்கானல் கோட்டாட்சியர் சிவக்குமார், டி.எஸ்.பி., ஆத்மநாதன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்று பதில் பெற்றுத் தருவதாக உறுதியளித்தனர்.
இந்நிலையில் கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் எனத் திண்டுக்கல் ஆட்சியர் மு.விஜய லட்சுமியிடம், இ.பெ.செந்தில்குமார் எம்எல்ஏ நேரில் வலியுறுத்தினார். இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டுசெல்வதாக ஆட்சியர் உறுதியளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.
கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல அரசு தடை விதித்ததை ரத்து செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டோர்.