சட்டை அணியாமல் உடலில் இலை- தழைகளைக் கட்டிக் கொண்டு, திருச்சியில் இன்று சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் 47 பேரை போலீஸார் கைது செய்தனர்.
"உரங்கள் விலை மிக அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதைக் கண்டித்தும் மற்றும் உர விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும். உர விலையை அரசே நிர்ணயம் செய்ய வேண்டும்,.வேளாண் விளைப் பொருட்களுக்கு உற்பத்தி செலவைவிட 2 மடங்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்" என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், தேசிய- தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் பி.அய்யாக்கண்ணு தலைமையில் அந்தச் சங்கத்தினர் டெல்லியில் சென்று போராட திட்டமிட்டிருந்தனர்.
இதன்படி, டெல்லிக்கு இன்று புறப்பட முயன்ற அய்யாக்கண்ணு உள்ளிட்டோரை போலீஸார் அண்ணாமலை நகரில் உள்ள அவரது வீட்டிலேயே தடுத்து நிறுத்தினர்.
இதையடுத்து, கோரிக்கைளை வலியுறுத்தியும் மற்றும் டெல்லிக்குச் செல்வதைத் தடுக்கும் போலீஸாரை கண்டித்தும் சாலை மறியலில் ஈடுபட அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகள், கரூர் புறவழிச் சாலையை நோக்கி வந்தனர். அப்போதும் போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்த முயன்றதால், இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு நேரிட்டது. தொடர்ந்து, போலீஸாரின் தடையை மீறி விவசாயிகள் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட அய்யாக்கண்ணு உட்பட விவசாயிகள் 47 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறும்போது, “உர விலையைக் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லிக்குச் சென்று போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டால், போலீஸார் தொடர்ந்து தடுத்து விடுகின்றனர். இந்தமுறை கரோனா பரவலைக் காரணம் காட்டி டெல்லி செல்ல வேண்டாம் என்று போலீஸார் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, உள்ளூரிலேயே போராட்டம் நடத்த அனுமதி கேட்டபோது தருகிறோம் என்று முதலில் கூறிய போலீஸார், திடீரென அனுமதி இல்லை என்று கூறிவிட்டனர். இதையடுத்து, கோட்டை ரயில் நிலையத்தில் போராட்டம் நடத்துவதற்காக புறப்பட்டுச் சென்றோம். அதையும் போலீஸார் தடுத்ததால் சாலை மறியலில் ஈடுபட்டோம்" என்றார்.