சென்னை மாநிலக்கல்லூரியில் ஏப்.25 அன்று நடக்கவிருந்த திருவண்ணாமலை ராணுவ ஆள்சேர்ப்பு பொதுத்தேர்வு கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ராணுவத்துக்கு தேர்வு செய்யப்படும் மிகப்பெரும் தேர்வு கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. திருவண்ணாமலையில் நடைபெற்ற ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் சிப்பாய் தொழில்நுட்பம்¸ சிப்பாய் நர்சிங் உதவியாளர்¸ சிப்பாய் நர்சிங் உதவியாளர் கால்நடை¸ சிப்பாய் எழுத்தர் மற்றும் ஸ்டோர் கீப்பர் தொழில்நுட்பம்¸ சிப்பாய் பொது பணி¸ சிப்பாய் வர்த்தகர் ஆகிய பணியிடங்களுக்கு இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதற்காக சென்னை உடபட திருவள்ளுர்¸ செங்கல்பட்டு¸ காஞ்சிபுரம்¸ ராணிப்பேட்டை¸ வேலூர்¸ திருப்பத்தூர்¸ திருவண்ணாமலை¸ கள்ளக்குறிச்சி¸ விழுப்புரம்¸ கடலூர் ஆகிய 11 மாவட்டங்களிலிருந்தும் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலிருந்தும்¸ ஆன்லைன் மூலம் 25¸000 இளைஞர்கள் ராணுவத்தில் சேருவதற்கு விண்ணப்பித்து, தினமும் 2000 இளைஞர்கள் வீதம் கலந்துக்கொண்டனர்.
ராணுவ ஆள்சேர்ப்பு முகாமில் உடல்தகுதி¸ மருத்துவத்தேர்வில் தேர்வுப்பெற்றவர்கள் சென்னை மண்டல ராணுவ ஆள்சேர்ப்பு தலைமை அலுவலகம் மூலம் நடத்தப்படும் பொது நுழைவுத் தேர்வில் ஏப் 25 அன்று கலந்துக்கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இந்தத்தேர்வு சென்னை மாநிலக்கல்லூரியில் நடக்கவிருந்தது. ஆனால் கடந்த 20 நாட்களாக அதிரித்துவரும் கரோனா இரண்டாவது அலை காரணமாக பொதுத்தேர்வை ராணுவ தலைமை ஒத்திவைத்துள்ளது.
நிலைமை சீரடைந்தவுடன் உரிய தேதி பின்னர் ராணுவ தலைமையிடம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ள ராணுவ தலைமை மேலும் விவரங்களுக்கு தங்களது (http://www.joinindianarmy.nic.in) இணையதளத்தை தேர்வர்கள் பார்வையிடும்படி தெரிவித்துள்ளனர்.