முதல்வர் பழனிசாமி சென்னை அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை நடக்க உள்ளது.
முதல்வர் பழனிசாமி நேற்றுக்காலை சேலத்திலிருந்து சென்னை வந்தார். பின்னர் தமிழகத்தில் உள்ள கரோனா தொற்று நிலை, அடுத்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைக்குறித்து சுகாதாரத்துறைச் செயலர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் அவர் நேற்று ஆலோசனை நடத்தினார். பின்னர் நேற்று மாலை ஊரடங்கு, கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியானது.
இந்நிலையில் இன்று காலை முதல்வர் பழனிசாமி அமைந்தக்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு குடலிறக்க நோய் உள்ளதால் ஏற்கெனவே திட்டமிட்டப்படி அறுவை சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.
மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் முன் அவருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் நெகட்டிவ் என வந்துள்ளது, அறுவை சிகிச்சைக்குப்பின் 3 நாட்கள் அவர் மருத்துவமனையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.