வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் பெய்த கன மழையின் காரணத்தால், விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பலர் மனம் நொந்து போயுள்ளனர். நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கினால் மட்டும் பாதிப்பல்ல, நெற்கதிர் வரும் பருவத்தில் பெய்த கனமழையால், கதிர்களெல்லாம் பதராகமாறி விளைச்சலை பாதித்துள்ளதையும் அரசு பாதிப்பாக கருத வேண்டும். விவசாயத்துக்கு பாதிப்பில்லை என்பது போல் செயல்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது ஆகும்.
டெல்டா மாவட்டங்களில் 1 ஏக்கர் நெல் சாகுபடிக்கு சுமார் ரூ.30 ஆயிரம் செலவாகிறது. ஆனால், செலவு செய்த பணத்தைக் கூட பெற முடியாத சூழல் தான் தற்போது நிலவுகிறது. கடலூரில் விவசாயம் செய்வதற்கு ஏற்றாற்போல் நிலத்தை சமன்படுத்தி வண்டல் மண் கொட்டி சீரமைப்பதற்கே ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் செலவாகும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.
டெல்டா மாவட்டம், கடலூர் மாவட்டம், மற்றும் பாதிக்கப்பட்ட பிற மாவட்டங்களில், இதுபோன்ற பாதிப்புகளுக்கு தற்போது அதிமுக அரசு அறிவித்துள்ள நிவாரணத்தொகை ஒரு ஹெக்டேருக்கு 13 ஆயிரம் 500 ரூபாய் என்பது “யானைப் பசிக்கு, சோளப்பொறியாகத்தான்” உள்ளது.
விவசாய பயிர்களுக்கு அறிவித்துள்ள நிவாரணத்தொகை மிக்குறைவானதென்று பல இடங்களில் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். எனவே விவசாயப் பயிர்களுக்கான நிவாரணத்தொகையை அதிமுக அரசு உயர்த்தி வழங்க வேண்டும்.
மேலும், நிவாரண உதவிகளை வழங்குவதற்கான கணக்கெடுப்பு பணிகளில் ஆளுங்கட்சி கவுன்சிலர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக செய்திகள் வெளியாகின்றன இது வன்மையாக கண்டிக்கத்தக்கதாகும். நிவாரண உதவிகளை வருவாய்த்துறையினர் மூலம் வழங்க வேண்டும்'' என்று விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.