கரோனா தடுப்பு நடவடிக்கையின் ஓர்அங்கமாக பொதுமக்களுக்கு கபசுரக்குடிநீர் வழங்க வேண்டும் என்று திமுகநிர்வாகிகள், தொண்டர்களுக்கு அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:
கரோனா முதலாவது அலையின்போது ‘ஒன்றிணைவோம் வா' என்றமக்கள் இயக்கம் மூலம் மனித நேயப்பணிகளை திமுக செய்தது. 2-வது அலை தொடங்கியவுடன் நான் கேட்டுக் கொண்டதன் பேரில் திமுக மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் கபசுரக் குடிநீர் வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருவதை அறிவேன்.
தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டவர்கள் கரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட முடியாத நிலைஇருந்தது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மூலம் தேர்தல்ஆணையத்திடம் அனுமதி கோரப்பட்டது.
கரோனா தடுப்புப் பணியின் ஓர்அங்கமாக கபசுரக் குடிநீர் உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட ஆட்சேபம் இல்லை என்று தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. எனவே, தேர்தலில் போட்டியிட்ட மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட வேட்பாளர்கள் அனைவரும் கபசுரக்குடிநீர் வழங்கும் பணியில் முழுமூச்சாக ஈடுபட்டு, கரோனா 2-வது அலையிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டும்.
கபசுரக் குடிநீர் வழங்கும்போது, அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடம்உள்ளிட்ட விவரங்களை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும். அரசு அறிவுறுத்தியுள்ள தனிமனித இடைவெளி, முகக் கவசம் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகக் கடைபிடித்து, பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.