பொள்ளாச்சி அடுத்த கோட்டூர் அருகே மயிலாடுதுறையில் ஆழியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில், சினிமா படப்பிடிப்புகள் நடைபெறுவது வழக்கம். தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் இங்கு வந்து, ஆற்று நீரில் குளிக்கின்றனர். தடுப்பணை மற்றும் ஆழமான பகுதிகளில் குளிக்கும்போது, நீர் சுழலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர். இதனால், தடுப்பணை பகுதியில் குளிக்க பொதுப்பணித் துறையினர் தடை விதித்துள்ளனர்.
தடையையும் மீறி, தடுப்பணை மற்றும் ஆற்றில் பலர் குளித்து வந்தனர். கடந்த 2011-ல் இருந்து இதுவரையில் 100-க்கும் மேற்பட்டோர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இதனால் தடுப்பணை பகுதியில் வார விடுமுறை, கோடை விடுமுறை நாட்களில் பொதுப்பணித் துறையினர் மற்றும் ஆழியாறு போலீஸார் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அத்துமீறி நுழைபவர்களுக்கு ரூ. 1000 அபராதம் விதிக்கப்படும், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என போலீஸார் சார்பில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் வருகை இன்றி தடுப்பணை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.