கரோனா தடுப்பூசி குறித்து அவதூறு பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப் பதி வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி யிருப்பதாவது:
தமிழகத்தை பொறுத்தவரை தற்போதைய கரோனா பரவலுக்கு தேர்தல் ஒரு முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. இதில் எந்த கட்சியும் விதிவிலக்கு அல்ல. இந்த நிலைக்கு காரணம் அரசியல்வாதிகள்தான் என்பதை கசப்போடு ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
அதேநேரம், தடுப்பூசி குறித்த பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய அரசியல்வாதிகள்தான், முதல்நபராக தடுப்பூசி போட்டுக்கொண் டனர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
உலகிலேயே இந்தியாவில்தான் தினந்தோறும் அதிக தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தியாவில் இதுவரை 60 ஆயிரம் மையங்களில் 12.26 கோடி பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதில் 10.63 கோடி பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். 1.60 கோடிக்கும் அதிகமானோர் 2-வது தவணை தடுப்பூசியும் போட்டுக் கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சிகள் அரசியல் உள்நோக்கத்தோடு தடுப்பூசி குறித்த எதிர்மறையான கருத்துகளை பரப் பாமல் இருந்திருந்தால், இதைவிட 2 மடங்கு தடுப்பூசி போடப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகம்இல்லை. அரசியல் கட்சிகள் தங்கள் அரசியல் உள்நோக்கங்களை தவிர்த்து, மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும். தடுப்பூசி குறித்து அச்சத்தை பரப்பும் வதந்திகள், கருத்துகளை முன்வைப்பது மனிதகுலத்துக்கே கேடு விளைவிக்கும் என்பதை உணர வேண்டும். தடுப்பூசி குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு பரப்புவோர் மீது கடும்நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித் துள்ளார்.