தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளதால் கேரள மாநிலத்தில் இருந்து சென்னைக்கு மீன் வரத்து அதிகரித்துள்ளது. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் நேற்று மீன் வாங்க குவிந்த அசைவப் பிரியர்கள். படம்: க.ஸ்ரீபரத் 
தமிழகம்

மீன்பிடி தடைக்காலம் காரணமாக மீன் விலை அதிகரிப்பு

செய்திப்பிரிவு

மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் விலை நேற்று உயர்ந்து காணப்பட்டது. இருப்பினும் மீன் சந்தைகளில் மீன்களை வாங்க ஏராளமான மக்கள் குவிந்தனர்.

சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கிழக்கு கடல் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ம்தேதி முதல் மீன்பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால், விசைப்படகுகளில் மீன வர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. இருப்பினும், ஃபைபர் படகு மூலம் மீனவர்கள் கடலுக்குச் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில், ஞாயிற்றுக் கிழமையான நேற்று விடுமுறை தினம் என்பதால், சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்துக்கு அதிகாலை முதலே பொதுமக்களும் வியாபாரிகளும் மீன்வாங்க குவிந்தனர். இதனால் கூட்டம் அதிகரித்துக் காணப் பட்டது. மீன்களை வாங்க வந்தபெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். இருப்பினும், சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை. இதனால் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் தொடர்ந்து அறிவுறுத்தி வந்தனர்.

மீன்பிடிக்க தடை இருப்பதால் நேற்று மீன்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. இதன்படி, கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.590-க்கு விற்பனை செய்யப்பட்ட வஜ்ஜிரம் நேற்று ரூ.640-க்கும், கருப்பு வாவல் ரூ.400-ல் இருந்து ரூ.450-க்கும் இறால் ரூ.350-ல் இருந்து ரூ.400-க்கும், நண்டு ரூ.210-ல் இருந்து ரூ.240-க்கும், சங்கரா ரூ.280-ல் இருந்து ரூ.350-க்கும் விலை உயர்ந்து விற்பனையானது.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தை, நொச்சிக்குப்பம், பட்டினம்பாக்கம் உட்பட சென்னை நகரின் பெரும்பாலான மீன் சந்தைகளில் ஏராளமான பொதுமக்கள் மீன்களை வாங்கிச் சென்றனர்.

விலை உயர்வு குறித்து வியாபாரிகள் கூறியதாவது: மீன் பிடித் தடைக்காலம் அமலுக்கு வந்து 4 நாட்களே ஆகிறது. இதனால், விசைப்படகுகளில் பிடிக்கப்பட்ட மீன்கள் கையிருப்பில் உள்ளன. எனவேதான் மீன்களின் விலை 10 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. இனி வரும் நாட்களில் கையிருப்பில் இருக்கும் மீன்கள் குறையும்போது விலை மேலும் 50 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

SCROLL FOR NEXT