மழை, வெள்ளத்தில் தமிழகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதால் குடிமைப் பணி முதன்மை தேர்வை சில வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் அனுப்பிய கடிதத்தில் ''சென்னையில் உள்ள அனைத்திந்திய குடிமைப் பணித் தேர்வுகள் பயிற்சி மையத்தைச் சேர்ந்த மாணவர்கள் நேற்று (டிச. 11) என்னைச் சந்தித்தனர். மழை, வெள்ளத்தால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் வரும் 18-ம் தேதி நடைபெறவுள்ள குடிமைப் பணி முதன்மை தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என சென்னை பாலா ஐ.ஏ.எஸ். அகாடமியின் இயக்குநர் எஸ். பாலமுருகன் தலைமையில் மாணவர்கள் மனு ஒன்றை என்னிடம் அளித்தனர். அப்போது திமுக மாநிலங்களவை குழுத் தலைவர் கனிமொழியும் உடனிருந்தார். இதனை தங்களின் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
தமிழகத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகளை தாங்கள் நேரில் பார்வையிட்டீர்கள். குடிமைப் பணி முதன்மை தேர்வுக்காக சென்னையில் சுமார் 1,000 மாணவர்கள் தயாராகி வந்தனர். கடந்த நவம்பர் 1 முதல் டிசம்பர் முதல் வாரம் வரை தொடர்ந்து பெய்த கன மழையால் மாணவர்கள் பெரும் துன்பத்துக்கும், துயரத்துக்கும் ஆளாகியுள்ளனர்.
கன மழையால் சென்னையில் அடையாற்றின் கரையோரம் இருந்த குடிமைப் பணி பயிற்சி மையத்தில் வெள்ளம் சூழ்ந்தது. இதனால் உணவு, மின்சாரம் இன்றி அங்கிருந்த மாணவர்கள் வெளியேறும் நிலை ஏற்பட்டது. தேர்வுக்காக ஆண்டு முழுவதும் அவர்கள் மேற்கொண்டிருந்த தயாரிப்புகள் வீணாகியுள்ளன. இதனால் அவர்கள் முதன்மை தேர்வை எதிர்கொள்ள முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சென்னை மாநகரின் பெரும்பகுதியும், புதுச்சேரி, ஆந்திரத்தின் சில பகுதிகளும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன.
எனவே, மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) திட்டமிட்டபடி குடிமைப் பணி முதன்மைத் தேர்வை நடத்தினால் மற்ற மாநில மாணவர்களோடு தமிழகம், புதுச்சேரி, ஆந்திர மாணவர்கள் போட்டியிட முடியாது. அவ்வாறு தேர்வை நடத்துவது பொது மற்றும் சமூக நீதிக்கு எதிரானதாக அமையும். குடிமைப் பணி தேர்வுக்காக பயிற்சி பெற்று வரும் மாணவர்களின் பெரும்பாலானோர் சமூக, கல்வி ரீதியாக பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவர்கள்.
எனவே, இந்தப் பிரச்சினையில் தாங்கள் தனிப்பட்ட முறையில் அவசரமாக தலையிட்டு குடிமைப் பணி முதன்மைத் தேர்வை சில வாரங்களுக்கு தள்ளி வைக்க வேண்டும். அனைத்து மாநில மாணவர்களுக்கும் சமமான நீதி கிடைக்க தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.