சென்னை மூழ்கிப் போய்விடவில்லை, தன்னார்வலர்களால் பலமடங்கு உயர்ந்திருக்கிறது என்று 'தி இந்து' முகாமில் சூர்யா பெருமையுடன் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வாரங்களாக 'தி இந்து' முகாமில் பல்வேறு மக்களுக்கு உதவிகள் வழங்குவது நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு தன்னார்வலர்கள் தங்களை இணைத்துக் கொண்டு பணியாற்றி வருகிறார்கள்.
'தி இந்து' முகாமுக்கு வந்த சூர்யா தன்னார்வலர்களை சந்தித்து உற்சாகமூட்டினார். அதனைத் தொடர்ந்து சூர்யா பேசிம்போது "முகம் தெரியாத பல்வேறு நாயகர்கள் இருக்கிறார்கள். அவர்களில் ஒரு சிலரை இப்போது பார்த்தேன். 15 நாட்களாக இங்கு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
எல்லாருமே 16 மணி நேரத்துக்கும் மேலாக பணியாற்றி வருகிறார்கள். வெவ்வேறு பணிகளில் இருப்பவர்கள் இங்கு கூடியிருக்கிறார்கள்.
சுமார் 6 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை இங்கிருந்து மக்களிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறார்கள். சுமார் 80 ஆயிரம் குடும்பங்கள் இதன் மூலம் பயன் அடைந்திருக்கின்றன. இவ்வளவு அழகாக எவ்வளவு பொருட்கள் வருகிறது, எவ்வளவு பொருட்கள் செல்கிறது என்று கணக்கிட்டு ஒரு முகாமை நான் பார்த்ததில்லை. சென்னை மூழ்கிப் போய்விடவில்லை, தன்னார்வலர்களால் பலமடங்கு உயர்ந்திருக்கிறது" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
</p>