தமிழகம்

பொள்ளாச்சியில் சிறுமிகள் பலாத்காரம்: தமிழக பாஜக கண்டனம்

செய்திப்பிரிவு

பொள்ளாச்சி அருகே பள்ளிச் சிறுமிகள் இருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்துக்கு, தமிழக பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு தனியார் நிறுவன மாணவ, மாணவியர் விடுதிக்குள் புகுந்து இரு மாணவியரை பாலியல் பலாத்காரம் செய்த சில சமூக விரோதிகளின் மிருகவெறிச் செயல் கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

ஆறாம் வகுப்பு மற்றும் ஐந்தாம் வருப்பில் படிக்கும் குழந்தைப் பருவத்திலுள்ள அம்மாணவியர் இக்கொடியவர்களின் பிடியில் சிக்கியது பெரும் அதிர்ச்சி தரும் நிகழ்ச்சியாகும்.

இது போன்ற பாலியல் பலாத்கார குற்றங்களுக்கு கடுமையான உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை பிரதமர் மோடி பாராளுமன்ற முதல் உரையில் வலியுறுத்தியுள்ளார்.

மாணவ, மாணவியர் விடுதிகள் அது தனியாருடையதாகட்டும், அரசு சார்புடையதாகட்டும் உறுதியான கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நிர்வாக அமைப்புக்குள் இருந்தாக வேண்டும் என்பதை அறிவுறுத்தும் நிகழ்ச்சியாக பொள்ளாச்சி நிகழ்ச்சி அமைந்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட மாணவியரின் நலன் கருதி தமிழக முதலமைச்சர் தலா 3 லட்சம் ரூபாயும், அவர்களுக்கு அரசு விடுதியில் தங்கிப்படிக்க வாய்ப்பும் வழங்கியிருப்பது மாணவியரின் பெற்றோருக்கு ஆறுதலளிக்கும் நல்ல நடவடிக்கையாகும்.

பொருளாதார உதவி மட்டுமல்லாமல் குற்றம் செய்த கொடியவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு மிகக் கடுமையான தண்டனை தர வேண்டும். குறிப்பிட்ட அவ்விடுதிக்குள் அடிப்படை வசதி ஏதுமின்றி ஒரே இடத்தில் மாணவ, மாணவியரை தங்க வைத்துள்ளதும், பாதுகாவலர்கள் யாரும் இல்லாமல் போனதும் தவறு நடப்பதற்கு ஏதுவாக அமைந்துவிட்டது. அதற்கு காரணமான நிர்வாகத்தினர்

மீதும் கடும் நடவடிக்கையை பிரயோகிக்க வேண்டும். அதன் மூலம் இனி எங்கும், எப்போதும் இது போன்ற குற்றங்கள் நடைபெறாமல் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT