மனித உரிமைகள் ஆணையத்தை குற்றவாளிகள் ஒரு பாதுகாப்புக் கேடயமாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.
தமிழக மனித உரிமைகள் ஆணையத்தின் நிறுவன தினம்மற்றும் வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்ட தொடக்க விழா சென்னை பசுமை வழிச் சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:
மனித உரிமைகள் என்ற வார்த்தையை சில தனிப்பட்ட அமைப்புகள் கட்டப் பஞ்சாயத்து செய்வது போன்று தவறாக பயன்படுத்தி வந்தன. இதுபோன்ற காரணங்களால்தான் மனித உரிமைகள் என்ற வார்த்தையை தனியார் அமைப்புகள் பயன்படுத்த தடை விதித்து சட்டம் கொண்டுவரப்பட்டது.
சமூகத்தில் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கும்போதும்,எளிய மக்கள் பாதிக்கப்படும்போதும் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துவது வரவேற்கத்தக்கது. இதுபோன்ற நடைமுறையை ஆணையம் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு இந்த அமைப்பின் மீதான நம்பகத்தன்மை அதிகரிக்கும். அதேநேரம், மனித உரிமைகள் ஆணையத்தை குற்றவாளிகள் ஒரு பாதுகாப்புக் கேடயமாக பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.
காவல் துறையின் பங்களிப்பு இல்லாமல் ஒழுங்கான சமூகத்தை உருவாக்குவது சாத்தியம் அல்ல. ஆனால், சமீபகாலமாக காவல் துறையினர் எந்த செயலில் ஈடுபட்டாலும், அதில் குற்றம் கண்டுபிடிக்கும் மனப்போக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. காவல் துறையினர் இதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். கைதுசெய்யப்படும் நபர்கள் கண்ணியத்துடன் நடத்தப்படுவதை காவல் துறையினர் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் பேசும்போது, “மக்களுக்கு ஜனநாயகத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை தொடர்ந்து நிலைநாட்ட மனித உரிமைகள் ஆணையத்தின் செயல்பாடுகள் அவசியமானது. காவல் துறையினர் சில நேரம் விதிகளை மீறி செயல்படும் சூழல்களில், காவல் துறைக்கு அதன் எல்லைகளை உணர்த்தவும், ஜனநாயகத்தை காக்கவும் மனித உரிமைகள் ஆணையம் உறுதுணையாக இருக்கிறது” என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநில மனித உரிமைகள் ஆணைய தலைவர் பாஸ்கரன், உறுப்பினர்கள் சித்தரஞ்சன் மோகன்தாஸ், து.ஜெயச்சந்திரன் கலந்துகொண்டனர்.