திருச்சி திருவெறும்பூர் எறும்பீஸ் வரர் கோயில் குடமுழுக்கு விழாவுக்காக, முதல்கட்டமாக ரூ.40 லட்சம் செலவில் பழமை மாறாமல் சீரமைக்கும் பணிகளை இந்திய தொல்லியல்துறை மேற்கொண்டு வருகிறது.
திருவெறும்பூரில் உள்ள மலைக் கோயில் என்றழைக்கப்படும் நறுங்குழல் நாயகி உடனாய எறும் பீஸ்வரர் கோயில், தேவார மூவர்களில் ஒருவரான நாவுக் கரசரால் பாடப்பெற்றது. செங் கல் கட்டுமானமாக இருந்த இக்கோயிலை பொதுக்காலம் 952-ல் கண்டராதித்த சோழர் ஆட்சிக்காலத்தில் கற்றளியாக மாற்றிய மைத்தவர் இந்த பகுதியைச் சேர்ந்த அறச்செல்வரான வீரநாராயணன் என்னும் செம்பியன் வேதிவேளான் என்பவர்.
இந்த கோயிலின் சுவாமி கரு வறையைச் சுற்றிலும் ஏராளமான கல்வெட்டுகள் உள்ளன. இவற்றில் இந்திய தொல்லியல்துறை 46 கல்வெட்டுகளையும், டாக்டர் மா.இராசமாணிக்கனார் வரலாற்றாய்வு மையத்தினர் 14 கல் வெட்டுகளையும் கண்டறிந்துள் ளனர். இந்த கல்வெட்டுகள் இந்த பகுதியின் 600 ஆண்டுகால அரசியல், சமுதாய வரலாற்றை வெளிப்படுத்துகின்றன.
இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட் டில் இருந்தாலும், தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டு, இந்திய தொல்லியல் துறையால் நினைவுச்சின்னமாக அறி விக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலில் 28.4.1998 அன்று குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது 22 ஆண்டு களுக்கு மேலானதால், விரைவில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என பக்தர்கள் விடுத்த கோரிக் கைகளைத் தொடர்ந்து, இந்திய தொல்லியல்துறை சார்பில் முதல் கட்டமாக ரூ.40 லட்சம் செலவில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக தொல்லியல் துறை வட்டாரங்கள் கூறியது: பழமையும், தொல்லியல் பெருமை யும் வாய்ந்த இக்கோயிலில் அடிவாரத்தில் உள்ள மண்டபம், மலை ஏறும் படிகளுக்கு மத்தியில் அமைந்துள்ள மண்டபம், மலை மேல் உள்ள எறும்பீஸ்வரர் கருவறை மண்டபம் மற்றும் சுற்று மண்டபம், மடப்பள்ளி, நறுங்குழல் நாயகி அம்மன் சன்னதி மற்றும் பள்ளியறை ஆகியவற்றின் மேற்கூரைகளில் மழைநீர் கசிவுகள் இருந்தன. இவற்றை சரி செய்ய செங்கல், ஜல்லி, சுண்ணாம்பு நீர் கலந்து தளம் போடும் பணி நடை பெற்று வருகிறது.
மலை ஏறும் படிகளுக்கு மத்தி யில் அமைந்துள்ள மண்டபத்தின் நான்கு தூண்களில் இருந்த காரைகள் பெயர்ந்திருந்ததால், அவை முழுமையாக பெயர்த்து எடுக்கப்பட்டு, அதில், பழமை யான முறையில் சுண்ணாம்பு, கடுக்காய், வெல்லம் உள்ளிட்டவை கலந்த கலவை மூலம் பூச்சு செய்யப்படுகிறது. அந்த மண்டபத்தின் மேற்கூரை மர சாரங்களும் மாற்றப்படவுள்ளன.
இதைத் தொடர்ந்து மலை மேல் உள்ள கோயிலின் பிரகாரத்தின் சுவர் பெயர்ந்து விழுந்துள்ளதால், அதையும் சீரமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இந்த பணிகள் முடிந் தவுடன் அடுத்தகட்டமாக கோயில் குட முழுக்கையொட்டி, மேலும் செய்ய வேண்டிய அனைத்து சிறு, சிறு சீரமைப்புப் பணிகளும் மேற் கொள்ளப்படும் என தெரிவித்தனர்.
கோயில் குடமுழுக்கு நடத்துவ தற்கு முன்பாக செய்யப்படும் பாலாலயத்தை விரைந்து நடத்த அற நிலையத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.