தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்கக்கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் 

செய்திப்பிரிவு

மாற்று திறனாளிகளுக்கு என மாவட்டந்தோறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைப்பது குறித்து திங்கட்கிழமை விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுவதில் பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் மாற்றுத் திறனாளிகளையும் தடுப்பூசி செலுத்தும் முன்னுரிமை பட்டியலில் சேர்க்க உத்தரவிடக் கோரி சமூக நீதி முன்னேற்றத்துக்கான மையத்தின் இணை நிறுவனர் மீனாட்சி பாலசுப்பிரமணியன் பொது நல மனுவை தாக்கல் செய்திருந்தார்.

தனி மனித விலகல், முக கவசம் அணிவது போன்றவற்றை பின்பற்றுவதில் சவால்களை சந்திப்பதால் மாற்றுத் திறனாளிகளில் அதிகமானோர், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டு, உயிரிழந்துள்ளதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது, அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “தடுப்பூசி செலுத்துவதற்காக மத்திய அரசு வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படி தான் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை வழங்குவது குறித்து சுகாதார துறை செயலாளர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார், அதற்கு இதுவரை எந்த பதிலும் வரவில்லை”. என்று விளக்கம் அளித்தார்.

தமிழகத்தில் தடுப்பூசி போதிய கையிருப்பு உள்ளதாக அரசு நேற்றைய தினம் கூறியுள்ளதை சுட்டிக்காட்டி நீதிபதிகள், தொற்று எளிதாக பரவக்கூடிய நபர்களாக மாற்றுத் திறனாளிகள் இருப்பதால் அவர்களுக்கு மட்டும் மாவட்டந்தோறும் கரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் அமைக்க முடியுமா என்பதை தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மாநில பேரிடர் மேலாண்மை துறை இயக்குனர் ஆகியோரிடம் விளக்கம் பெற்று ஏப்ரல் 19ம் தேதி தெரிவிக்க உத்தரவிட்டு, வழக்கை தள்ளிவைத்துள்ளனர்.

SCROLL FOR NEXT