தமிழகம்

அதிகரிக்கும் கரோனா பரவல்; உதவி பொறியாளர்கள் கணினி தேர்வு ஒத்திவைப்பு: மின்வாரியம் அறிவிப்பு

செய்திப்பிரிவு

கரோனா பரவல் இரண்டாம் அலையின் வேகம் அதிகம் இருப்பதால் சென்னையில் மின் வாரியத்தின் சார்பில் ஏப்ரல் 24 தொடங்கி மே மாதம் 16 வரை நடக்கவிருந்த இளநிலை பொறியாளர்கள் கணினி வழித்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக மின் வாரியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின்வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு:

“பிப்ரவரி 15 மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட உதவி பொறியாளர் / மின்னியல் 400 பதவிகளுக்கும் உதவி பொறியாளர் / இயந்திரவியல் 125 பதவிகளுக்கும் மற்றும் உதவி பொறியாளர் / கட்டடவியல் 75 பதவிகளுக்கும் ஏப்ரல் 24, 25, மே. 01 மற்றும் 02 ஆகிய நாட்களிலும், மற்றும் அறிவிப்பு ஜன 08 மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்ட இளநிலை உதவியாளர்/ கணக்கு 500 பதவிகளுக்கும் மே 08, 09, 15 மற்றும் 16 ஆகிய நாட்களிலும் கணினி வழி தேர்வு நடத்திட உத்தேசிக்கப்பட்டது.

தற்போது அதிகரித்து வரும் கரோனா தொற்று காரணமாக மேற்கண்ட பதவிகளுக்கு ஏப்ரல் 24 முதல் மே.16 வரை மேற்காணும் தேதிகளில் உத்தேசிக்கப்பட்ட கணினி வழி எழுத்து தேர்வு தற்பொழுது ஒத்திவைக்கப்படுகிறது. மேலும் கணினி வழி எழுத்துத் தேர்வு நடைபெறும் நாட்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் www.tangedco.gov.in என்ற இணையத்தையும் அவரவர் மின்னஞ்சல் முகவரியையும் அவ்வப்பொழுது பார்வையிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது”.

இவ்வாறு மின் வாரிய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT