விவேக் - அமைச்சர் ஜெயக்குமார்: கோப்புப்படம் 
தமிழகம்

திரைப்படங்களின் வாயிலாக மூடப்பழக்கங்களை ஒழிக்க முயன்றவர்: அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல்

செய்திப்பிரிவு

திரைப்படங்களின் வாயிலாக மூடப்பழக்கங்களை ஒழிக்க முயன்றவர் விவேக் என, அமைச்சர் ஜெயக்குமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை, சாலிகிராமம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு இன்று (ஏப். 17), அதிமுக சார்பில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அஞ்சலி செலுத்தினார்.

இதன்பின், செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், "விவேக் என் நெருங்கிய நண்பர், நல்ல பண்பாளர். எப்போது சந்தித்தாலும் அந்த சந்திப்பு மகிழ்ச்சியாக இருக்கும். பேசும்போது அவரின் நகைச்சுவை உணர்வைக் கண்டு நான் பலமுறை வியந்திருக்கிறேன்.

அவருடைய இறப்பு திரையுலகத்துக்கு மட்டுமல்லாமல் தமிழ்ச்சமுகத்துக்கே பேரிழப்பு. அவர் பன்முகத்தன்மை வாய்ந்தவர். நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் சிறந்த வசனகர்த்தாவாகவும் இருந்தார். சுற்றுச்சூழல் பாதுகாவலராகவும் இருந்தார். இயற்கை மீது பேரன்பு கொண்டவர்.

வாழும் கலைவாணர் மறைந்தது அதிர்ச்சியையும் வேதனையையும் தருகிறது. திரைப்படங்களின் வாயிலாக மூடப்பழக்கங்களை ஒழிக்க முயன்றவர் விவேக். மரம் இல்லாவிட்டால் பிரபஞ்சமே இருக்காது என்பதை உணர்ந்து மரங்களை நடுவதற்கு வலியுறுத்தியவர். முதல்வர் பழனிசாமி சார்பில் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன்" என தெரிவித்தார்.

SCROLL FOR NEXT