தமிழகம்

பாராட்டுவதற்கு தயக்கம் காட்டாத விவேக்: முன்னாள் காவல் அதிகாரியின் அனுபவம்

மு.அப்துல் முத்தலீஃப்

சொந்த வாழ்க்கையில் சோகம் சூழ்ந்திருந்தாலும் சமூக அக்கறையுடன் மரம் நடுவது, விழிப்புணர்வு பிரச்சாரம் என தனது வாழ்க்கையை நகர்த்தியவர் விவேக், மனதில் தோன்றியதை சமுதாயத்தில் எந்த நிலையில் இருந்தாலும் பாராட்ட தயங்காதவர் விவேக், பாராட்டப்பட வேண்டியவர்கள் பெயர்களை பட்டியலாக எழுதி வைத்து பாராட்டுவார் என்கிறார்கள் உடன் பழகியவர்கள்.

விவேக் அப்துல் கலாமின் உண்மையான சீடர் எனலாம், சினிமா கலைஞர் என்பதைத் தாண்டிய சமூக அக்கறை அவருடையது. அதை செயல் வடிவில் செய்து காட்டியவர், அவரது ட்விட்டர் பக்கத்தின் தலைப்பிலேயே அய்யா அப்துல் கலாமின் வழிகாட்டுதலின் பேரில் ஒரு கோடி மரம் நடுவது லட்சியம் 33.5 லட்சத்தை எட்டியுள்ளேன் என்று பதிவிட்டு வைத்துள்ளார்.

அவரது ட்விட்டர் பக்கம் முழுவதும் மரம் நடுவது பெரும்பாலான பதிவுகளாக உள்ளன. அப்துல் கலாமின் இயக்கத்தை தனது திரைத்துறை புகழ் மூலம் இளைஞர்களிடையே கொண்டு சென்று மக்கள் இயக்கமாக மாற்றியுள்ளார் விவேக். ஆனால் ஒரு கோடி என்கிற இலக்கை எட்டும் முன் இயற்கை அவரை பறித்துக்கொண்டுள்ளது.

ஆல மரத்தின் நடுமரம் 33.5 லட்சம் மரத்துடன் பட்டுப்போனாலும் அதன் விழுதுகளாக லட்சக்கணக்கான இளைஞர்கள் இயக்கமாக தமிழகம் முழுவதும் வியாப்பித்து மரம் நடும் பேரியக்கமாக மாறியுள்ளது. அது கட்டாயம் விவேக்கின் ஒரு கோடி மரம் நடும் லட்சியத்தை முடித்து வைக்கும்.

விவேக்கின் ட்விட்டர் பக்கத்தில் மரம் நட்டதை குறிப்பிட்டு போடுவோம் அதை விவேக் எடுத்து உடனடியாக பாராட்டுவது எங்களுக்கு உத்வேகமாக இருக்கும் என்கிறார்கள் அந்த இளைஞர்கள். இன்று காலையில் தனது அஞ்சலியை விவேக்குக்கு செலுத்தும் விதமாக புதுக்கோட்டை, கோவில்பட்டி உள்ளிட்ட பல இடங்களில் இளைஞர்கள் மரம் நட்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர் இதுதான் விவேக் விரும்பிய மாற்றம்.

2008-ம் ஆண்டு ஒரு தீபாவளி நாளுக்காக விவேக் அப்துல் கலாமை பேட்டி எடுத்தது அவரது வாழ்க்கையில் வேறுவித சிந்தனைக்கு மாற்றியது. ஒரு கோடி மரம் நட அப்துல்கலாம் வைத்த வேண்டுகோள் அவரது எண்ணத்தை வளமாக்கியது.

மக்கள் சுவாசிக்க ஆக்சிஜன் வேண்டும், பருக நீர் வேண்டும் அதற்கு மரம் வேண்டும் என்பதற்காக மரம் நடும் இயக்கத்தை ஆரம்பித்தார். சமீபத்தில் அவரது ட்விட்டர் பதிவில் கூட நிலத்தடி நீரைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக தனக்கே உரிய பாணியில் ரஜினி ஸ்டைலில் பதிவிட்டிருந்தார்.

எதையும் தனக்கே உரிய ஸ்டைலில் பேசக்கூடியவர் விவேக். மேடையில் அவரது பேச்சுத்திறமை ஒரு விஷயத்தை அவர் வெளிப்படுத்த எடுத்துக்கொள்ளும் வித்தியாசமான அணுகுமுறை அனைவரையும் கவர்ந்த ஒன்று.

எல்லோரையும் பாராட்ட பட்டியல் போட்டு வைத்திருப்பார், போன் செய்து பாராட்டுவார் விவேக் என்று நடிகர் பாண்டியராஜன் கண்ணீர் மல்க பேசியதை இங்கு நினைவு கூறும் வேளையில் அதையே ஆமோதிக்கிறார் காவல் ஆணையர் அலுவலக ஓய்வு எஸ்.ஐ.அருள்.

அவர் யாரையும் பாராட்ட என்றுமே தயங்கியதில்லை, மனதில் பட்டதை சிறியவர் பெரியவர் என்று பேதம் பாராமல் பாராட்டியவர் என்கிறார் காவல் ஆணையர் அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வுப்பெற்ற எஸ்.ஐ.அருள். காவல் துறைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி எதுவாக இருந்தாலும் அதிகாரிகளின் முதல் சாய்ஸ் விவேக்காகத்தான் இருக்கும், ஹெல்மட் விழிப்புணர்வு தொடங்கி காவல் ஆணையர் அலுவலகத்தில் மரம் நடு விழா வரை அனைத்திலும் விவேக் முதல் ஆளாக பொதுமக்களுக்கு சமூக விழிப்புணர்வை கொண்டு சேர்த்துள்ளார்.

காவல் ஆணையராக ஜார்ஜ் இருந்தபோது ஹெல்மட் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றுக்கு விவேக் வந்திருந்தார். அதன் பின்னர் பலமுறை அவர் காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வருவார். வருவதற்கு முன் மக்கள் தொடர்பு அலுவலகத்துக்கு (பிஆர்ஓ ஆஃபீஸ்) போன் செய்வார், அப்போது எஸ்.ஐயாக இருந்த நான் போன் அடித்தால் எப்போதும் உடனே ஒரு ரிங்கில் எடுத்து விடுவேன், பிஆர்ஓ ஆஃபீஸ் எஸ்.ஐ.அருள் பேசுகிறேன் வணக்கம் என்று சொல்வேன், இதை பல முறை கவனித்துள்ளார் அவர்.

அருள், ஓய்வு எஸ்.ஐ காவல் ஆணையர் மக்கள் தொடர்பு அலுவலகம்

ஒருமுறை காவல் ஆணையரைப் பார்க்க அலுவலகம் வந்தவர், நேராக பிஆர்ஓ ரூமுக்கு வந்தவர் இங்கு அருள் எஸ்.ஐ யார்? என்று கேட்க நான் தான் சார் என்றேன், அப்படியே கட்டிப் பிடித்துக்கொண்டார். ''எத்தனை முறை போன் செய்தாலும் அடுத்த ரிங்கில் எடுத்து பேசுகிறீர்களே, இப்படித்தான் மக்கள் தொடர்பில் உள்ளவர்கள் இருக்கணும்'' என்று பாராட்டினார்.

அதோடு நிற்காமல் காவல் ஆணையர் ஜார்ஜிடம் உங்கள் பிஆர்ஓ அலுவலக எஸ்.ஐ அருள் மோசமான ஆள் சார் என்று கூற கமிஷனர் நெற்றியை சுழித்துப் பார்க்க எனக்கு என்ன இவர் மாற்றி சொல்கிறாரே என்று தோன்ற, ''எப்போது போன் செய்தாலும் டக்குன்னு எடுத்து பேசுகிறார்'' என்று அவருக்கே உரிய பாணியில் மாற்றிப்பேசி சிரிக்க வைத்தார்.

அத்துடன் தனது முகநூலிலும் அதை பதிவு செய்திருந்தார். அதன் பின்னர் என்னுடன் உள்ள தொடர்பை தொடர்ந்து வந்தார். சாதாரண எஸ்.ஐ என்னை அவர் பாராட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை, அதிலும் காவல் ஆணையரிடம் சொல்லி பாராட்ட வேண்டும் என்கிற அவசியமில்லை ஆனால் அதை எல்லாம் அவர் செய்தார், அவர் மறைவுக்கு காவல்துறை மரியாதை அரசு அளித்திருப்பது அவருக்கு சரியான மரியாதை” என்று அருள் தெரிவித்தார்.

இதுபோன்று தினம் தினம் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழகம் முழுவதும் மரம் நட்டு புகைப்படம் வெளியிடும் இளைஞர்களை தனது ட்விட்டரில் ரீட்வீட் செய்து பாராட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார். சமூக அக்கறையின் வெளிப்பாடாக அவரது கடைசி பொது நிகழ்ச்சி அமைந்துவிட்டது.

கரோனா தடுப்பூசி போட பொதுமக்கள் தயங்கியதை அறிந்து அவர்கள் தயக்கம் போக்க, நேரடியாக தானே முன் வந்து தடுப்பூசி போட்டு அதை செய்தியாக்கி விழிப்புணர்வு ஊட்டினார். அந்த நிகழ்ச்சியிலும் தனக்கு ஊசிப்போட்ட செவிலியரைப் பெயர்ச் சொல்லி குறிப்பிட்டு பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

தடுப்பூசி அனைவரும் போடவேண்டும் என்கிற அவரது எண்ணம், அதை அவரது மரணத்தை வைத்து மாற்றுக் கருத்துடையவர்களை விவேக் உயிருடன் இருந்தால் ஏற்றுக்கொள்ள மாட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் என்றுமே அவர் அறிவியல் சார்ந்த கருத்துக்களுக்கே முன்னுரிமை கொடுத்தார். அவரது விருப்பம் அனைவருக்கும் தடுப்பூசி கரோனா இல்லா தமிழகம் என்பதே.

SCROLL FOR NEXT