பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரி: நிர்வாக சீர்கேட்டால் பான்லேவில் பல லட்சம் இழப்பு; அரசு நடவடிக்கை எடுக்க ஏஐடியுசி கோரிக்கை  

செய்திப்பிரிவு

நிர்வாக சீர்கேட்டால் பான்லேவில் பல லட்சம் இழப்பு ஏற்பட்டு வரும் நிலையில், அதனை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஏஐடியுசி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து, புதுச்சேரி ஏஐடியுசி மாநில பொதுச் செயலாளர் சேதுசெல்வம் இன்று (ஏப். 17) வெளியிட்டுள்ள அறிக்கை:

"புதுச்சேரி அரசு நிறுவனமான பான்லே நிறுவனத்தில் பால், தயிர், நெய், ஐஸ்கிரீம் ஆகிய பொருட்கள் உற்பத்தி செய்து பாண்லே நிறுவன பார்லர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இவற்றில் தயிர் உற்பத்திக்கான மூலப்பொருள் இதுவரை பயன்படுத்தி வந்த பொருளுக்கு மாற்றாக, புதிதாக பாலை தயிராக மாற்றும் மூலப்பொருள் புதிய நிறுவனத்திடம் வாங்கப்பட்டு தயிர் உற்பத்தி செய்வதற்காக சேர்க்கப்பட்டது. இதன் காரணமாக, பால், தயிராகாமல் வீணாகி நாளொன்றுக்கு 5,000 லிட்டர் வீதம் கடந்த 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை வீணாகி கொட்டப்பட்டுள்ளது.

இதனால், பான்லே நிறுவனத்துக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தவறுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பான்லே நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்பட்டு வியாபாரம் செய்து வந்த நெய் உற்பத்தி செய்யாமல் சுமார் 20 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால், இவைகள் மூலம் வரக்கூடிய லாபம் திட்டமிட்டு முடக்கப்பட்டுள்ளது.

கப் ஐஸ்கிரீம் உற்பத்தியும் செய்யாததால் இவைகளும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிர்வாக சீர்கேடு காரணமாக பான்லே நிறுவனத்தின் பார்லர் மூலமாக வியாபாரம் நாளொன்றுக்கு விற்பனையான ரூ.25 லட்சத்தில் இருந்து குறைந்து, தற்போது நாளொன்றுக்கு சுமார் ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை மட்டுமே விற்பனையாகிறது.

இவற்றை போர்க்கால அடிப்படையில் சரிசெய்து, இந்நிறுவனத்தில் தட்டுப்பாடு இல்லாமல் தேவையான பொருட்களை தரமாக உற்பத்தி செய்து பார்லர்கள் மூலம் விற்பனை செய்து லாபம் ஈட்டுவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். பால் பாக்கெட் செய்யப்படும் பாலிதீன் கவர் தரமற்றதாக வாங்கி பாக்கெட் செய்வதால் பால் பாக்கெட் உடைந்து நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, தரமான பாக்கெட் வாங்கி பால் விநியோகம் செய்திட வேண்டும். மேலும், பார்லர் மற்றும் சில பிரிவுகளில் வேலை செய்யக்கூடிய தொழிலாளர்கள் தொடர்ச்சியாக இரண்டு ஷிப்ட் வேலை செய்து வருகிறார்கள். இவற்றை சரி செய்ய புதுச்சேரி அரசு தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்".

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT