திமுக சார்பில் நடிகர் விவேக் உடலுக்கு ஆ.ராசா, ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை, சாலிகிராமம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு இன்று (ஏப். 17), திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில், திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி., அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி., சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் நேரில் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, ஆ.ராசா செய்தியாளர்களிடம் பேசுகையில், "திரையுலகில் கலைவாணர், எம்.ஆர்.ராதாவுக்குப் பிறகு சிரிப்போடும் சிந்தனையோடும் பகுத்தறிவு கொள்கைகளை வெளிப்படுத்திய மாபெரும் கலைஞரான விவேக் மறைவு, கலையுலகத்துக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ்ச்சமுதாயத்துக்கும் பேரிழப்பு என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வருந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் தலைநகரில் இல்லாத காரணத்தினால், திமுக சார்பிலும், அவர் சார்பிலும், மறைந்த நடிகர் விவேக் உடலுக்கு மலர் மாலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்த அறிவுறுத்தியிருந்தார். அதனடிப்படையில், திமுக தலைவர் சார்பிலும், திமுக சார்பிலும் எங்களின் ஆழ்ந்த இரங்கலையும் அஞ்சலியையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
திரையுலகில் ஒரு மிகப்பெரிய பகுத்தறிவுக் கொள்கைகளால் அவர் பெற்ற இடத்தை ஈடுசெய்வதற்கு திரையுலகம் வெகு காலம் போராட வேண்டியிருக்கும் என்பது எங்களின் தாழ்மையான கருத்து. அவரை இழந்து வாடும் திரையுலகத்துக்கும் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்" என தெரிவித்தார்.