தமிழகம்

சமூகப் பிரச்சினைகளை தொடர்ந்து பேசியவர் நடிகர் விவேக்: கனிமொழி இரங்கல்

செய்திப்பிரிவு

பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர் என்று நடிகர் விவேக்கின் மரணத்துக்கு திமுக எம். பி. கனிமொழி இரங்கல் தெரிவித்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை சாலிகிராமத்தில் உள்ள அவரின் வீட்டில் இருந்தபோது அவருக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தார் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் வீட்டிலிருந்து வடபழனி தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு ஐசியூ பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் ரத்த நாள அடைப்பைக் கண்டறியும் ஆஞ்சியோ சிகிச்சையும், இதயச் செயல்பாட்டை அதிகரிக்க, இயல்பு நிலைக்குக் கொண்டுவர எக்மோ சிகிச்சை அளிக்கப்பபட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணி அளவில் மீண்டும் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது, மருத்துவர்கள் தீவிரமாக முயன்றும், அவரைக் காப்பாற்ற முடியவி்ல்லை. அவரின் உயிர் பிரிந்தது.

இந்த நிலையில் விவேக்கின் மரணத்துக்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

திமுக எம்.பி., கனிமொழி தனது ட்விட்டர் பக்கத்தில், ”நடிகர் பத்மஸ்ரீ. விவேக் மறைவுச் செய்தி வருத்தமளிக்கிறது. அவர் பல சமூகப் பிரச்சினைகளைக் குறித்து தனது திரைப்படங்கள் மூலமும், பிற தளங்களிலும் தொடர்ந்து பேசியவர். சமூகத்தின் பல நிலைகளிலும், நிலவி வரும் பாசாங்குகளைக் கண்டித்தவர். அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT