சென்னையில் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் சூழலில், கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான ஆர்வம் மக்களிடம் அதிகரித்துள்ளது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தின் வெளியே தடுப்பூசி போட்டுக்கொள்வதற்காக நேற்று காத்திருந்த பொதுமக்கள்.படம்: ம.பிரபு 
தமிழகம்

அடுத்த 4 நாட்களுக்கு மட்டுமே மருந்து கையிருப்பு உள்ளது; தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு: ஊசி போட வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் மக்கள்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் கரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வருவதால் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தமிழகத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகள், மினி கிளினிக்உட்பட 5 ஆயிரம் மையங்களில் கோவேக்ஸின், கோவிஷீல்டு ஆகிய 2 தடுப்பூசிகள் தடுப்பூசி போடப்படுகின்றன. தொடக்கத்தில் தயக்கம் காட்டிய பலரும் தற்போது ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். இதனால் கூட்டம் அலைமோதுகிறது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை உட்படதடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து தடுப்பூசி போட்டுச் செல்கின்றனர். அதேநேரம், பல மையங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

முக்கியமாக, கோவேக்ஸின் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. தனியார் மையங்களில் எங்கும் கோவேக்ஸின் இல்லை. சில அரசு மையங்களில் மட்டும் அது செலுத்தப்படுகிறது. இதனால்,முதல் தவணை கோவேக்ஸின் போட்டவர்கள், 28 நாட்கள் நிறைவடைந்தும் 2-ம் தவணை தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:

அதிகபட்சமாக நேற்று முன்தினம் ஒரேநாளில் 2.17 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை சுமார் 45 லட்சத்துக்கும் மேற்பட்ட தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு 47.03 லட்சம் கோவிஷீல்டு, 7.82 லட்சம் கோவேக்ஸின் என மொத்தம் 54.85 லட்சம் தடுப்பூசிகளை மத்திய அரசு அனுப்பியுள்ளது. தற்போதைய நிலையில் 4 நாட்களுக்கு மட்டுமே தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. அதனால்தான் மையங்களுக்கு குறைவான அளவில் தடுப்பூசிகள் அனுப்பப்பட்டு வருகின்றன. சிலமையங்களில் அதிக அளவில் மக்கள் வருவதால் அனைவருக்கும் தடுப்பூசி போட முடிவதில்லை.

தொடக்கத்தில் இந்திய தயாரிப்பான கோவேக்ஸின் போட்டுக் கொள்ள பலர் முன்வரவில்லை. பிரதமர், மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் உள்ளிட்டோர் போட்டுக் கொண்டதை அடுத்து பலரும் கோவேக்ஸின் போட்டுக் கொண்டனர். தற்போது இந்த மருந்து உற்பத்தி குறைவாக உள்ளது.

முதல் தவணையாக போட்டுக் கொண்ட தடுப்பூசியைதான் 2-ம் தவணையாக போட்டுக் கொள்ள வேண்டும். தற்போது தமிழகத்துக்கு 15 லட்சம் கோவிஷீல்டு, 5 லட்சம் கோவேக்ஸின் என 20 லட்சம் தடுப்பூசி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தினால், நமக்கு தேவையான தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கும்.

தடுப்பூசியை சேமித்து வைக்கும் குளிர்சாதன கிடங்குகள், குளிர்சாதன வாகனங்கள் குறைவாகஉள்ளன. எனவே, விரைவாகதடுப்பூசிகளை மையங்களுக்கு கொண்டு செல்வதில் சிரமம் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT