சட்டப்பேரவை தேர்தலில் செலவு செய்த பணம், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உத்தரவின்படி தரப்பட்டுள்ளதால், அக்கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சட்டப்பேரவை தேர்தலில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து, தேமுதிக 59 இடங்களில் போட்டியிட்டது. தேமுதிக வேட்பாளர்களுக்கு கட்சி சார்பில் நிதி அளிக்காததால், தங்களது சொந்த பணத்தை செலவு செய்ததாக கூறப்பட்டது. பெரும்பாலான வேட்பாளர்கள் கடன் வாங்கி செலவு செய்ததாக கட்சித் தலைமைக்கு தெரிவித்தனர்.
தேர்தல் முடிந்து, முடிவுக்காக காத்திருக்கும் நிலையில், தேர்தலில் தேமுதிக வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை கணக்கிட்டு, உடனே வழங்குமாறு தலைமை நிர்வாகிகளுக்கு கட்சித் தலைவர் விஜயகாந்த் திடீரென அறிவுறுத்தினார்.
இந்நிலையில், தேமுதிக வேட்பாளர்கள் தேர்தலில் செலவு செய்த தொகை நேற்று அளிக்கப்பட்டுள்ளது. இது, கட்சி வேட்பாளர்கள், நிர்வாகிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக தேமுதிக வேட்பாளர்கள் சிலர் கூறியபோது, ‘‘எங்கள் கோரிக்கையை ஏற்று,வேட்பாளர்கள் செலவு செய்த பணத்தை அளிக்குமாறு விஜயகாந்த் உத்தரவிட்டுள்ளார். ‘என்னால் யாரும் எதையும் இழக்க வேண்டாம்’ என்று அவர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, எங்கள் வேட்பாளர்கள் அனைவருக்கும் முழு தொகையும் வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
தேர்தல் முடிவுக்கு பிறகு வேறு கட்சிகளுக்கு செல்லலாம் என நினைத்திருந்தவர்களையும் இந்த முடிவு யோசிக்க வைத்துள்ளது’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.